செய்திகள்தொழில்நுட்பம்

சொந்த பிள்ளைகளுக்காகத் தனிப்பள்ளிக்கூடம் அமைத்த எலான் மஸ்க்!!

Elon Musk

உலகின் டாப் 3 பணக்காரர்களின் வரிசையில் இருக்கும் எலான் மஸ்க் எலக்ட்ரிக் கார், ராக்கெட், கணிணி சில்லுகள் போன்றவற்றின் உற்பத்தியில் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறார். அவர் இந்த ஆண்டு அமெரிக்கா அரசாங்கத்திற்கு செலுத்தவேண்டிய வரித்தொகையைப் பார்த்தாலே நமக்கெல்லாம் தலைச்சுற்றிவிடும்.

அந்த அளவிற்கு உலக வர்த்தகத்தையே ஆட்டிப்படைத்து வரும் எலான் மஸ்க் தனது குழந்தைகளுக்காகத் தனி பள்ளி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் என்றால் அதில் பெரிய ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஆனால் எலான் மஸ்க் எதற்காக இந்தப் பள்ளியை ஆரம்பித்தார் என்பதுதான் சுவாரசியமே.

தொழில்நுட்ப வளர்ச்சியினால் உலக நாடுகளைத் திரும்பி பார்க்க வைத்திருக்கும் எலான் மஸ்கிற்கு 6 குழந்தைகள். சமீபத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு அவர் XAEA12 என்று குறியீட்டு பெயர் வைத்திருந்ததும் சோஷியல் மீடியாவில் பிரபலமாகப் பேசப்பட்டது.

இந்நிலையில் எலான் மஸ்க் கடந்த 2014 முதல் வாரத்தில் கலிபோர்னியாவில் உள்ள தனது ஸ்பேஸ்-X நிறுவனத்தின் ஒரு மூலையில் Ad Astra எனும் பள்ளியைத் துவங்கினார். இதில் 9 குழந்தைகள் இருந்தநிலையில் தற்போது 8-14 வயதுடைய 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். மேலும் இந்தக் குழந்தைகள் அனைவருக்கும் ஒரே ஒரு வகுப்பறைதான். இந்தப் பள்ளிக்கும் ஒரே ஒரு ஆசிரியதான் இருக்கிறார். அவருடைய பெயர் ஜோஷ் டான்.

இந்த ஆசிரியர் பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு, இசை, மொழி என எதையும் சொல்லிக் கொடுப்பதில்லை. ஆனால் விண்வெளி ஆராய்ச்சி முதற்கொண்டு இயந்திரங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் அடிவேர் வரை சொல்லிக் கொடுக்கிறார். மேலும் இந்தப் பள்ளியில் மதிப்பெண், தேர்வுகள் என எதுவும் கிடையாது. ஒருவேளை குழந்தைகள் விரும்பினால் சுற்றுச்சூழல் பற்றி கட்டுரை எழுதலாம். அரசியல் போன்ற மற்ற விஷயங்களை பற்றி கலந்துரையாடலாம்.

அதோடு இந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பெரும்பாலான நேரங்களை ஆய்வகங்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள கண்காட்சி கூடங்களுக்குச் சென்று வருகின்றனர். மேலும் கடந்த ஜுன் 2020 ஆம் ஆண்டு கொரோனா நேரத்தில் Ad Astra பள்ளி மூடப்பட்டபோதும் எலான் மஸ்க் இந்தப் பள்ளியின் ஆசிரியர் ஜோஷ் டானிற்குப் புது வசதிகளைச் செய்துகொடுத்து அஸ்ட்ரா நோவர் எனும் புது வடிவத்தையே உருவாக்கிவிட்டார்.

இதுகுறித்து சீன ஊடகம் ஒன்று எலான் மஸ்க்கிடம் கேள்வி எழுப்பி இருந்தது. இதற்குப் பதில் அளித்த அவர் நான் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பிரபலமான பள்ளி ஒன்றில் படித்தேன். ஆனால் வழக்கமான பள்ளி பேருந்துகள் நான் நினைத்ததைச் செய்யவில்லை எனக் குறிப்பிட்டு இருந்தார். மேலும் இதற்காக தனிப்பள்ளியே உருவாக்க வேண்டுமா? எனக் கேட்டபோது டெஸ்லா நிறுவனம் ஒரு பேட்டரியை உருவாக்க நினைத்தது. அதன் தரம் உயர்வாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிக செலவு செய்ய வேண்டியிருந்தது. அப்படித்தான் தரத்திற்காக மெனக்கெட வேண்டியிருக்கிறது எனப் பதில் அளித்துள்ளார்.

மேலும் பள்ளிகளில் ஏன் இதைக் கற்றுக்கொள்கிறோம் என ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்க முன்வருவதில்லை. கணித சூத்திரங்களை நாம் ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்? அது எதற்குப் பயன்படும் எனத் தெரியாமல் பள்ளிக்குச் சென்று எந்தப் பலனும் இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு உதாரணம் கூறிய அவர் ஒரு இயந்திரத்தை பிரிப்பதற்கான அனைத்து உபகரணங்களையும் ஆசிரியர் அறிமுகப்படுத்தி வைக்கிறார். அதனால் குழந்தைகள் இந்த பொருட்களை வைத்து இயந்திரத்தை பிரிக்க முடியும் என்று கற்றுக் கொள்கின்றனர். அதே நேரத்தில் அந்த இயந்திரத்தை பொருத்துவதற்கான சாத்தியமும் அதில் இருக்கிறது எனத் தெரியாமலேயே போய்விடுகிறது.

இப்படித்தான் சுற்றுச்சூழல் பற்றிப் படிக்கும்போது ஏரி தொடர்ந்து மாசுபடுவதை மட்டுமே ஆய்வுக் கட்டுரையாகச் சமர்ப்பித்து வருகிறோம். ஒரு கட்டத்தில் அந்த ஏரி அழிந்தே போய்விடுகிறது. இந்த சூழல் அந்த ஊரில் உள்ள அரசியல் வாதிக்கு இதற்கு முன்பே நன்றாகத் தெரிந்திருக்கும். ஆக பள்ளிப் படிப்பு என்பது முழுவதுமான கல்வி இல்லை என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். மேலும் ஸ்டீப் ஜாப்ஸ், பில் கேட்ஸ் போன்றோர் கல்லூரிகளில் இருந்து வெளியேறியவர்கள் என்பதையும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இதனால் அமெரிக்கா கல்வி முறையை விமர்சித்து இருக்கும் எலான் மஸ்க் தனி வகையிலான ஒரு கல்வியை முயற்சித்து வருகிறார். இது பலரிடம் ஆச்சர்யத்தையும் புது விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Related Articles

Leave a Reply

Back to top button