மட்டக்களப்பில் உள்ள அனைத்து சிவில் சமூகங்களும் ஒருமித்து அணிதிரள வேண்டும். தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா.
மட்டக்களப்பில் வாழும் அனைத்து சிவில் சமூகங்களும் அநீதிகளுக்கெதிராகவும் தமது உரிமைகளுக்காகவும் அணிதிரண்டு ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டும் என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றிப்பு நிகழ்வு மட்டக்களப்பு கூட்டுறவு கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை 05.12.2021 இடம்பெற்றது.
மாவட்ட சர்வ மத அமைப்பின் சார்பாக ஹர்ஷாயினி மனோகரன் இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார்.
நிகழ்வில் மாவட்ட சர்வமத அமைப்பின் அங்கத்தவர்கள் மதத் தலைவர்கள் செயற்பாட்டாளர்கள் உட்பட தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சமன் செனவிரத்ன நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ரஷிகா செனவிரத்ன அலுவலர் அயேஷா ஜெயவர்தன உட்பட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நிகழ்நிலை தொழினுட்பத்தினூடாக மாவட்ட சர்வமத உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா சிவில் சமூக அமைப்புக்கள் தங்களைப் பலப்படுத்திக் கொள்வதோடு சமாதானத்தைப் பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பதுடன் மக்களுக்கும் இது தொடர்பில் அவர்களுக்கு விளங்கக்கூடிய வகையில் விடயங்களை எத்தி வைக்க வேண்டும்.
அரசியமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டமென்பது அதி உச்ச தரத்திலான அரசியல் சட்டமாகும்.
அது மக்களுடைய பாதுகாப்பிற்காக இயற்றப்பட்ட ஒரு சட்டமாகும். இந்த அரசியலைமப்புச் சட்டத்தை மாற்றுகின்றபொழுது இரண்டு முக்கியமான விடயங்கள் இருக்கின்றன என்பதை மக்களுக்குச் சொல்லி வைக்க விரும்புகின்றோம். அதிலே முதலாவது விடயம் ஜனாதிபதியிடம் உள்ள அதிகார பலத்தை நாங்கள் பரீட்சித்து சமப்படுத்த வேண்டியிருக்கின்றது.
19வது அரசியல் சீர்திருத்தத்திலிருந்து 20வது சீர்திருத்தத்திற்கு வந்துள்ளோம். இந்த 20வது சீர் திருத்தத்திலேயே ஜனாதிபதிக்கு மிக அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எந்தவொரு அதிகாரியை நியமிப்பதற்கும் எந்தவொரு அரச அதிகாரியை நீக்குசுவதற்கும் ஜனாதிபதியால் முடியும்.
நீதியினூடாக சிவில் சமூகம் பலாபலன்களை அடைந்து கொள்ள முடியும் என்கின்றபோதிலும் அதிலும் பலவீனங்களும் அதிகார பலமில்லாத நிலையும் காணப்படுகின்றது. எனவே இந்த விடயங்கள் குறித்து சிவில் சமூகம் இன்னமும் இறுக்கமாக ஐக்கியப்பட்டு உறுதிப்பாட்டுடன் செயற்பட வேண்டும்” என்றார்.
வ.சக்திவேல் 077 6279 436