அதிகார பகிர்வு கிடைக்கும் வரையில் அதிகார பரவலாக்கலை பெற முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் 7 தமிழ் தேசிய கட்சிகள் அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியிருந்தன.
இந்த விடயம் தொடர்பில் இலங்கைத் தமிழரசு கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி என்பன இணைந்து இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தன.
இதில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த ஊடக சந்திப்பில் கருத்துரைத்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, இந்த விடயத்தில் உண்மைக்கு புறம்பான கருத்துகள் முன்வைக்கப்படுவதாக தெரிவித்தார்.
இதேவேளை, 13ஆம் திருத்தச்சட்டத்தை எதிர்ப்பதாக தெரிவிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எவ்வாறு மாகாண சபை தேர்தலில் போட்டியிட தயாராகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியிருந்தார்.
எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்றைய ஊடக சந்திப்பில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இதற்கு அவர் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, 13 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்துள்ள வாகன பேரணி இன்று யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது.
குறித்த வாகனப்பேரணியானது இன்று காலை கிளிநொச்சியில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளது.
தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அனைத்து தமிழ் மக்களதும் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும் என இதன்போது துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றிருந்தனர்.