கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தினால் மாவீரர் தின நினைவு நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடையுத்தரவினை மீள் பரிசீலிப்பதற்கான நகர்த்தல் பத்திரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே சிவாஜிலிங்கம் சார்பில் நேற்றைய தினம் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நகர்த்தல் பத்திரம் மீதான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றது.
ஏலவே பிறப்பித்த உத்தரவு சட்டத்திற்கு அமைவாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிவான், அதை இரத்து செய்யவோ அல்லது மாற்றியமைக்கவோ வேண்டிய தேவை இருப்பதாக தான் கருதவில்லை என்றும் தீர்ப்பளித்துள்ளார்.
இதேவேளை, மன்னாரில் நாளைய தினம் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க 6 பேருக்கு தடை விதிக்க கோரி காவல்துறையினர் முன்வைத்த விண்ணப்பத்தை மன்னார் நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர முதல்வர் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக இந்த தடை விண்ணப்பம் முன்வைக்கப்பட்டது.
இதேவேளை, முல்லைத்தீவில் மாவீரர் நாளுக்குத் தடையுத்தரவு கோரி மீண்டும் காவல்துறையினர் முன்வைத்த விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டு நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழு காவல்நிலையங்களினால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து குறித்த நினைவுகூரலுக்கான தடையுத்தரவை வழங்குமாறு மீண்டும் விண்ணப்பிக்கப்பட்டது.
குறித்த வழக்கு இன்று மீண்டும் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, தடையுத்தரவை வழங்குமாறு காவல்துறையினர் கோரியிருந்தனர்.
இதன்போது பிரதிவாதிகள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் தங்களது சமர்ப்பணங்களையும் முன்வைத்தனர்.
இரண்டு தரப்பு நியாயங்களையும் ஆராய்ந்த முல்லைத்தீவு நீதிவான் காவல்துறையினரின் விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.