நாட்டின் பொருளாதார நிலைமை சீர் கெட்டதை தொடர்ந்து காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் முனைப்பு பெற்று வருகின்றது. குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றனர்.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மக்களின் இறையாண்மையை வலுவூட்டுவதற்கு எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பது குறித்த காணொளி ஜனாதிபதி செயலகத்தின் முன்பக்க சுவர்களில் ஒளித்திரை (ப்ரொஜக்டர்) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காட்சிப்படுத்தப்பட்டன.
நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நவீன தொழில்நுட்பத்தின் மூலம் ஒளி வீசப்பட்டு வசனங்கள் மற்றும் காட்சிகள் ஒளிரவிடப்பட்டமை விசேட அம்சமாக காணப்பட்டது. அதனை தடுக்கும் முகமாக அங்கு கடமையில் இருந்த சிலர் அந்த ஒளிகளை ஒளிரவிடாது தடுத்திருந்தனர்.