அரசாங்கத்தை வெளியேற்ற கோரும் போராட்டம் கொட்டும் மழைக்கு மத்தியிலும் 4 ஆவது நாளாகவும் தொடர்கிறது. இலங்கையின் மிக நீண்ட ஆர்ப்பாட்டமாக கருதப்படும் சுமார் 60 மணி நேரத்தையும் கடந்து தொடர்ச்சியாக இடம்பெறும் ‘ கோ ஹோம் கோட்டா’ எனும் தொனிப் பொருளிலான ஆர்ப்பாட்டம் பிரதமரின் உரையின் பின்னரும் நாட்டு மக்களின் தொடர் செயற்பாடாக தொடர்வதால் அதன் மீது தாக்குதல்கள் இடம்பெறலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மிரிஹானை சமபவத்தினைப் போன்று வேறு குழுவினரை அனுப்பி வன்முறைகளைத் தூண்டலாம் எனும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
காலி முகத்திடலை அண்மித்த – ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறையும் போது, இவ்வாறு இடம்பெறலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த தொடர் முற்றுகை போராட்டத்தை 24 மணி நேரமும் கண்காணிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சுயதீன குழுக்களும், தனி நபர்களும் இந்த கோரிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் முன் வைத்துள்ள நிலையில், அது தொடர்பில் அவதானம் செலுத்தி அவ்வாணைக் குழுவும் ஆர்ப்பாட்டத்தை கண்காணித்து வருவதாக அறிய முடிகிறது.
ஆர்ப்பாட்டத்தை குழப்ப, அல்லது அவர்கள் மீது வன்முறையை பிரயோகிக்க ஏதும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவா என்பது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக் குழு தொடர்ந்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவ்வாணைக் குழுவின் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.