நவம்பர் 2 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்!!
Colombo
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்தும் , விரைவில் தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஐக்கிய மகளிர் சக்தி , முன்னிலை சோசலிச கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உள்ளிட்ட பிரதான கட்சிகளும் , சிவில் அமைப்புக்களும் , காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்கார்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் கொழும்பில் செவ்வாய்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய மகளிர் சக்தியின் தலைவர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவிக்கையில் ,
நாட்டில் ரணில் – ராஜபக்ஷ ஆட்சி அமைக்கப்பட்டதன் பின்னர் தமது உரிமைகளுக்காக வீதிக்கிறங்கி குரல் கொடுப்பதற்கு மக்களுக்குள்ள உரிமை மறுக்கப்பட்டுள்ளது.ராஜபக்ஷாக்களை பதவி விலகுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் விளைவாகவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக வெவ்வேறு தரப்பினர் தனித்தனியாகக் குரல் கொடுத்தனர்.எனினும் அந்தக் குரல்கள் உரத்து ஒலிக்கவில்லை. எனவே தான் நவம்பர் 2 ஆம் திகதி அனைவரும் ஒன்றிணைந்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ள தரப்பினருக்கும் , எதிர்க்கட்சி தலைவர் சசஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து தரப்பினரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிப்பர் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் நாம் மக்கள் சார்பாகவே உள்ளோம் என்ற செய்தியை வழங்குவதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம்.அத்தோடு மக்களின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் விரைவில் தேர்தலை நடத்துமாறும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்படும்.
மக்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதியும் , அவர் தலைமையிலான அரசாங்கமுமே தற்போது காணப்படுகிறது. எனவே மக்களுக்கு அவர்கள் விரும்பும் தலைவரை தெரிவு செய்வதற்கான முழுமையான உரிமை காணப்படுகிறது. மக்களுக்கு அந்த உரிமையை வழங்கி , விரைவில் தேர்தலை நடத்தினால் நாட்டை விரைவில் வழமைக்குக் கொண்டு வர முடியும் என்றார்