இலங்கைசெய்திகள்

நீதிமன்றத் தடை உத்தரவையடுத்து கடலில் இறங்கிப் போராடிய மீனவர்கள்!!

black day

வீதியில் இறங்கிப் போராட நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், பருத்தித்துறை – சுப்பர்மடம் மீனவர்கள் இன்று கடலில் இறங்கிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைக் கண்டித்தும், வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்க்ளின் படகு மோதி உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கோரியும் பருத்தித்துறை – சுப்பர்மடம் மீனவர்கள் ஐந்தாவது நாளாக இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சுப்பர்மடம் மீனவர்கள் கடந்த 31ஆம் திகதி முதல் பருத்தித்துறை – பொன்னாலை வீதியை வழிமறித்து நேற்று வரையில் நான்கு நாட்களாகத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருந்தனர்.

அந்நிலையில், நேற்று குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளமை, பொதுமக்களின் இயல்வு வாழ்வுக்கு இடையூறு விளைவித்தல், கொரோனா அபாயம் உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டி பருத்தித்துறைப் பொலிஸார், பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் போராட்டத்துக்கு எதிராகத் தடை உத்தரவைப் பெற்றிருந்தனர்.

நீதிமன்றத் தடை உத்தரவை அடுத்து நேற்றிரவு மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இந்நிலையில், இலங்கையின் சுதந்திர தினமான இன்றைய தினத்தைக் கரிநாளாக அனுஷ்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக கடந்த மாதம் 27ஆம் திகதி கடலுக்குச் சென்ற வத்திராயன் மீனவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும், இதுவரை காலமும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து மெழுகு திரிகளை ஏந்தி, கறுப்புக் கொடிகளுடன் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

செய்தியாளர் – சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button