கட்டுரைசெய்திகள்

ஏற்றுக்கொள்ளுதல் என்பது…..!! – பாமா இதயகுமார்.

Artcle

ஏற்றுக் கொள்ளுதல் என்பது மனித உளவியல் பொறுத்தவரை ஒன்றை எதிர்க்காமல், அதை பற்றி வாதிடாமல் சொல்ல பட்ட விஷயத்தை அங்கீகரித்தல், ஒப்புதல் , சம்மதம் , ஏற்றுக்கொள்ளல் என்பதே.அது எப்பேர்பட்ட உறவாகட்டும் , உளவியல் சார்ந்த பிரச்சனை, தேகாரோக்கியம் சம்பந்தப்பட்ட விடயமாகட்டும் ,எதையும் வாதங்கள் இன்றி ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவற்றுக்கான தொடர்ச்சியாக,. அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும்.

ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தான் அதை நம்பவும் , அடுத்து என்ன செய்யலாம் எப்படி அமையும் எனும் நம்பிக்கையை வளர்க்கவும் வாய்ப்புகள் கிடைக்கும்.
ஏற்றுக்கொள்ளல் மறுதலிக்கப்படும் பட்சத்தில் நம்பிக்கையின்மை நிராகரிப்பு , நிதர்சனமற்ற தன்மை , அவநம்பிக்கை , நிலையற்ற மாற்றம் என்பவற்றை உருவாக்கி விடுகிறது. ஏற்றுகொள்ளலில் பொறுப்பும் நம்பிக்கையும் அதற்கான மாற்றமும் உருவாகும் என்ற மிகப்பெரிய அத்திவாரம் போடப்படுகிறது.

வாழ்வில் நாம், பலரைச் சந்தித்தாலும் எல்லோரையும் மனதார ஏற்றுக் கொண்டு விடுவதில்லை,

அவர்கள் தான் எங்கள் உற்ற நண்பர்கள் என்றோ, உறவு என்றோ இலகுவில் எண்ணி விடுவதில்லை. அதற்கான காரணம் எம் அந்தரங்களை யாரிடமும் பகிர விருப்பாமல் எமது தனித்துவம் பாதுகாப்பாக பேணப்படுவதை விரும்புகிறோம்.


ஒருவரிடம் நாம் எல்லாவற்றையும் மனம் திறந்து பகிர்கிறோம் என்றால் அவர்களை நல்ல நட்பாக , உறவாக , காதலாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே சாத்தியமாகிறது. அல்லது சில நிர்பந்தங்கள் பேரில் கூட பகிரப்படுகிறது. நாம் நல்ல நட்பு என்று நம்பியவர்கள் மூலமும் தெரிய வர வாய்ப்பு இருக்கிறது. அது வேற விஷயம்.

என்னுடன் ஒரு இளைஞன் வேலை செய்தான். அவன் நல்ல நட்போடு பேசுவான். நண்பர்கள் என்றால் அவர்களுக்கு உயிரையும் கொடுப்பான்.அவர்கள் இந்த ஜெனரேஷன் பையன் . தாராளமாக புகைப்பார்கள், வார இறுதி நாட்கள் என்றால் பப் போவார்கள் நண்பர்களுடன், குடித்து கும்மாளம் என்று மகிழ்ச்சியாக அவர்களை பொறுத்தவரை வாழ்க்கை நடத்துகிறார்கள்.

இந்த புகைத்தல், மது அருந்துதல் எல்லாம் அவர்களை பொறுத்தவரை தவறாக அவர்கள் நினைத்ததும் இல்லை , மிக சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். சொல்லும் போது அதிகாலை 3 மணி வரை குடித்தேன் என்று மிக கேஷுவலாக சொல்வதை கேட்டு நாங்கள் தான் வாயை பிளக்க வேண்டி இருக்கிறது . எங்களுக்கு தான் ஏதோ மாதிரி இருக்கிறது. அந்த ஏற்றுக் கொள்ளல் எங்களிடையே இன்னும் இல்லை , என்பது உண்மை.

அவன் பேசிக்கொண்டு இருக்கும் போது சொன்னான் நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே புகைக்க தொடங்கி விட்டேன். ஒளிச்சு ஒளிச்சு அப்ப எல்லாம் களவாக செய்தோம். அட காலேஜ் போன போது என் நண்பர் ஒரு இடத்துக்கு கூட்டி போனான் என் கூட படிக்கும் 75% பெண்கள் புகைத்து கொண்டு இருந்ததை என்னால் நம்ப முடியவில்லை, அதை ஏற்றுக்கொள்ள மிக மிக கஷ்டப்பட்டேன். இரண்டே நாளில் என்னை சமாதான படுத்திக்கொண்டேன். நாங்கள் புகைக்கலாம் என்றால் ஏன் அவர்கள் புகைக்க கூடாது என்று சிந்தித்த போது ஏற்றுக்கொள்ள முடிந்தது. பிறகு அவர்கள் எல்லோருடனும் சேர்ந்து புகைக்க தொடங்கி விட்டோம்.

அவன் பேசும்போது ஜாலியா என் மகன் போலவே பேசுவான். எனக்கும் அவனை மிகவும் பிடிக்கும் ஒரு நாள் பிரேக் நேரத்தில் வெளியே போனவன் ஓடி வந்தான் , என் அம்மாவுடன் பேசுங்கள் என்று தொலை பேசியை என் கையில் தந்தான். நலம் விசாரித்து கொண்டு, அவன் தாயாருடன் பேச, என் பிரியமான செல்ல குட்டி இவன் , ரொம்ப குழப்படியா , என்று தாய்மைக்கே உரிய ஆதங்கத்துடன் கேட்டார் . ‘உங்கள் மகன் மிக அருமையானவன் , அன்பானவன் என்று நான் சொன்ன போது அந்த தாயின் பூரிப்பு பேச்சில் தெரிந்தது.

அவனை பார்த்தேன் எவ்வளவு நம்பிக்கையோடு என்னிடம் அந்த போனை தந்தான் , அவனை பற்றி தவறாக எதுவும் சொல்ல மாட்டேன் என்ற நம்பிக்கை, அவன் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த தொடர்பை ஏற்படுத்த முடிந்தது தாயுடன் எனக்கு. இதுவரை நான் என் நண்பர்கள் வேலை இடத்து யாரையும் என் அம்மாவுக்கு அறிமுகம் செய்தது இல்லை என்றான். அதையும் அவன் தாயார் கூட பேசும்போது சொன்னார்.

ஏற்றுக்கொள்ளல் , நம்பிக்கை நிறைந்த பொறுப்பு , அதை ஏற்றுக் கொள்வதால் பல பிரச்சனைகள் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, அதற்கான தீர்வுக்கான வழிகள் தேடல் தொடங்குகிறது. வாழ்வில் ஒன்றை அங்கீகரிப்பதன் மூலம் நாம் அடுத்த கட்டத்துக்கு பயணிக்க முடியும் , அடுத்த தேடலை தொடங்க சரியானதை ஏற்றுக்கொள்ள தயங்க கூடாது அது போல எங்கள் தவறானதும் தயக்கமின்றி ஒத்துக்கொள்ளல் மிகப்பெரிய ஆறுதல்.

Related Articles

Leave a Reply

Back to top button