அன்பு காட்டுவதென்பது ஒரு வரம். காசா ? பணமா? மனதில் நிறைந்து கிடக்கும் அன்பை மற்றவர்கள் மீது , ஆசையோடும் அக்கறையோடும் கண்டிப்போடும் என வெவ்வேறு விதங்களில் காட்ட முடியும்.
பாசம், அன்பு, நேசம், காதல் இவை எல்லாம் ஒரே பொருள் கொண்டதே. இது
உறவுகளுக்கிடையிலான பிணைப்பை அதிகப்படுத்தும் ஒன்றாகும். அதிலும்
பெரும்பாலும் பெண்களே பாசத்தை அதிகமாகக் கொட்டுபவர்களாக உள்ளனர்.
அந்த பாசமே அவர்களுக்கு பாரிய சிக்கல்களை உண்டுபண்ணிவிடுகிறது.
அன்பை அள்ளிக் கொடுப்பதில் பெண்ணுக்கு நிகர் பெண்ணே தான்.
பாகுபாடற்ற பாசத்தின் வெளிப்பாடே பெண்மை. பெண்மை அன்பில்
நிறைகிறது.
மாமியார் – மருமகள் பிரச்சினைக்கு மூலகாரணமாக அமைவதும் இந்த
போதை தான். காதலித்த ஆணோ, காதலித்த பெண்ணோ விலகும் போது
தற்கொலைக்கு முயற்சிப்பதும் தன்னிலை தெரியாது நடந்துகொள்வதும் கூட
இந்த போதையினாலேயே ஆகும்.
சாதாரணமாக பெண்கள் அன்பிற்கும் அன்பினால் வரும் ஆளுகைக்கும்
கட்டுப்பட்டவர்கள். அதே போன்று அன்பினால் ஆளுவதையும்
விரும்புபவர்கள். அந்த ஆளுகையில் நேசம் நிறைந்திருக்கும், பாசம்
கொட்டிக்கிடக்கும். அதனைச் சிலர் தவறாகக் கருதுவதும் உண்டு.
மாமியார் – மருமகள் பிரச்சினையில் மாமியாரும் மருமகளும் முரண்பட்டு
நிற்பதற்கும் இதுவே, இந்த அன்பெனும் போதையே காரணமாகிறது.
அதாவது தன் மகன், தன் மகன் என பார்த்துப் பார்த்து
வளர்த்த மகன், திடீரென்று இன்னொருத்தருக்கு சொந்தம் என்பதை
சட்டென்று மனம் எற்க மறுப்பதால் ஏற்படும் ஆற்றாமையே மருமகள் மீதான
மோதலாக வருகிறது. இதில் மருமகள் பாடும் அதே தான், தான், தன்
குடும்பம் என வாழ்ந்தவள், அவர்கள் எல்லோரையும் விட மேலான
ஒருவராக கணவனை எண்ணி அவனே தனக்கு அனைத்தும் என நம்பி
வருகிகிறாள். வந்த இடத்தில் மாமியார் சின்னதாக முகம் திருப்பினாலும்
மிகப்பெரிய வலியாக உணர்கிறாள். ஓரிரு முறை சமாளித்தாலும் பின்னர்
அதனை கோபமாக மாற்றிவிடுவதால் தான் மாமியார் மருமகள் பிரச்சினை
என்ற வார்த்தையே வருகிறது. உண்மையில் அதீத அன்பின் வெளிப்பாடே
அதுவும். இது கூட ஒருவகை உரிமைப்போராட்டம் தான்.
ஆனால் இதனைத் தடுப்பதற்கு இலகுவான வழியொன்று உள்ளது.
மாமியாரும் மருமகளும் தாயும் மகளுமாக மாறிவிட்டால், அல்லது
இருவரும் நடைமுறை யதார்த்தத்தை புரிந்துகொண்டுவிட்டால் எந்தப்
பிரச்சினையும் இல்லை.
கணவன்மாரிடம் மனைவிமாரின் எதிர்பார்ப்பும் அன்புதான். அதே அன்பை கணவன்மாரும் மனைவிமாரிடம் எதிர்பார்க்கின்றனர்.
கணவனோ மனைவியோ எதைக்கொடுக்கின்றனரோ அதுவே கிடைக்கிறது. கீரையை விதைத்தால் சாமை கிடைப்பதில்லை. முள் மரத்தை நட்டுவிட்டு வாசப்பூக்களை எதிர்பார்க்கமுடியாது. எங்கள் எதிர்பார்ப்புகள் கிட்டாத போது, துவண்டுவிடும் நாம், மற்றவர்களும் இவ்வாறு எதிர்பார்ப்பார்கள் என்பதை உணர்வதில்லை. அதே எதிர்பார்ப்பை வேறொருவரிடத்தில் சட்டென்று திருப்பிவிடுவது மனித இயல்பாகிறது.
இதுவே பலருடைய வாழ்விலும் இடம்பெறுகின்றது. அதாவது அன்பு என்ற
ஒன்றுக்காய் அலைவதும் அதனை ஒரு போதை போல யாசிப்பதும்
இயல்பாகிவிட்டது. அதனால் தற்கொலைகளும் மலிந்துவிட்டன. அன்பு
அற்புதமானதே, அதற்காக பெண்களாகிய நாம் யாசிக்காதிருப்போம். இயல்பை
புரிவோம். அன்பு காட்டுவோம், எம்மை நாம் நேசிப்போம். மற்றவர்களை அதிகமாக நேசிப்போம்……மாற்றங்கள் எங்களில் இருந்து ஆரம்பிக்கட்டும். ….
கோபிகை.