கட்டுரை

வளர்ப்பும் வளைவும் – வேதநாயகம் தபேந்திரன்!!

artcle

“வளர்ந்த பிள்ளைகளுக்கு வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்வது எப்படி ? “
இப்படி ஒரு தலைப்பில் புத்தகம் உள்ளதா ? எனத் தேடிப் பார்த்தேன். ஒரு இடமும் அகப்படவேயில்லை.

இன்று வீட்டுக்கு வீடு வாசல்படியாக உள்ள பெரும் பிரச்சினைகளில் இது பிரதானமானது.
எனது தலைமுறை தான் பெற்றோருக்கும் வேலைகள் செய்து கொடுத்த இறுதித் தலைமுறையாவும் பிள்ளைகளுக்கும் வேலை செய்து கொடுக்கும் முதலாவது தலைமுறையாகவும் இருக்கப் போகிறது.

இரு வருடங்களுக்கு முன்பாக ஒரு பிரபல கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழாவுக்குப் போயிருந்தேன்.
பரிசு பெறும் மாணவர்களை அவதானித்தேன். பல மாணவர்கள் தமது பெருத்த தேகத்துடன் கஸ்டப்பட்டு மேடையேறிப் பரிசுகள் பெற்றார்கள்.அதிலும் பல பரிசுகளைப் பெற்ற ஒரு மாணவனின் பெற்றோர் பற்றிய விபரத்தை எனக்கு அருகிலிருந்த நண்பர் கூறினார்.
மாதாந்தம் பல இலட்ச ரூபா உழைக்கும் ஒரு பிரபலமானவரின் மகனாம் அந்தப் பையன். அந்த மாணவனுக்கு நாளாந்தம் ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு ஆசிரியர்கள் வீட்டிற்கு வந்து பிரத்தியேகமாகக் கற்பிப்பார்களாம். ஓவ்வொரு ஆசிரியருக்கும் மாதாந்தம் 6000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகின்றதாம்.
இயல்பாகவே திறமைசாலியான அந்த மாணவன் பிரத்தியேக வகுப்பு மூலமாக எல்லாப் பாடங்களிலும் உச்சப் புள்ளி எடுக்க முடிகின்றதாம்.
அந்த மாணவனது உடல் திணிவுச் சுட்டெண் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்க மாட்டாது.
இது போன்ற புறொய்லர் வளர்ப்புகள் இன்று எல்லாத் திசைகளிலும் நிகழ்கின்றது. இலங்கையரின் சராசரி ஆயுள் 75.5 வருடங்கள் எனப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றது. ஆனால் தொற்றா நோய்களுடன் மருந்துக் குளிசைகளைச் சுமந்து வரும் நீண்ட ஆயுள் நாட்டுக்கு நன்மை பயக்காது.
முன்னைய காலத்தில் நகரப் புறங்களிலும் கிராமப் புறங்களிலும் பிள்ளைகள் வீட்டு வேலைகள் செய்து வளர்ந்தார்கள்.மின்சாரம் இருந்தால் அது பணக்கார வீடாகப் பார்க்கப்பட்டது.
அதனால் மின்சாரம் இல்லாத வீடுகளில் கைளால் அதாவது மனித வலுக் கொண்டே தமது தேவைகளை நிறைவேற்றி முடிக்க வேண்டியிருந்தது.
வேலி அடைத்தல்,வீடு மேய்தல், வளவிலுள்ள குப்பை கூளங்களைக் கிடங்கு வெட்டித் தாழ்த்துதல், அரிசி மா இடித்தல்,விறகு கொத்துதல், வயல் தோட்ட வேலைகள் செய்தல், சைக்கிள் ஓடுதல் என வேலைகள் ஏராளம்.
செய்யும் வேலைகள் மிகச் சிறந்த உடற்பயிற்சியை வழங்கியது.கூலி கொடுக்காமலே எல்லா வேலைகளும் முடிந்தது. ஆரோக்கியமுள்ள ஒரு சமூகம் உருவாகியது.இரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றைப் பணக்கார நோய் என்றார்கள்.
இன்று அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வந்து விட்டது. கூடவே தொலைக்காட்சி, டிவிடி பிளேயர், குளிர்சாதனப் பெட்டி, ஸ்மார்ட் தொலைபேசிகள், கணனி என ஏராளம் நவீன இலத்திரனியல் சாதனங்கள் உட்புகுந்து விட்டது.
அதனால் பிள்ளைகள் மட்டுமல்ல பெரியவர்கள் கூட பொழுது போக்கு அம்சங்களில் கவனம் செலுத்துகின்றனர். விளைவு வேலைகள் செய்வதற்கு ஆள்களைப் பிடித்தல் அல்லது இயந்திரங்கள் மூலமாகச் செய்வித்தல் போன்றவை நிகழ்கின்றது. அது மட்டுமல்ல பலருக்குச் சகல வகையான உணவுகளும் தாராளமாகக் கிடைக்கின்றது. இருந்த இடத்திலேயே எல்லாம் பெறக் கூடிய நிலைமை மனிதனைச் சோம்பேறியாக்கி விடுகின்றது.
பிள்ளைகளும் பாடசாலை, ரியூசன் என்ற வேகமான சுற்றோட்டத்தினுள் அகப்பட்டு ஓய்வு நேரம் கிடைத்தாலும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்யாமல் கள்ளமடிக்கப் பழகி விடுகின்றனர்.

வீடுகளில் இன்னொரு அரசியல் ஓடுகின்றது. ஆண் பிள்ளைகள் அம்மாவின் செல்லங்கள். அதனால் அம்மாமார் என்ர அருமையான ஆம்பிளைப் பிள்ளைகள் எனச் சொல்லி வேலை செய்ய விட மாட்டார்கள்.
அதே வேளை பெண் பிள்ளைகள் அப்பாமாரின் செல்லங்கள். இதனால் அவர்களுக்குச் செல்லம் கொடுத்துச் சோம்பேறி ஆக்குவதில் அப்பாமாரின் பங்கு உண்டு.
மிக வறிய குடும்பங்களில் குறிப்பாகக் கிராமப் புறங்களில் பிள்ளைகள் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்யும் நிலைமை இன்றும் ஓரளவுக்குத் தொடர்கின்றது.
ஆனால் எல்லா இடங்களிலும் இப்படியல்ல. இது பொதுவான ஒரு கருத்து மட்டுமே.
உடற்பயிற்சி தரும் வேலைகளை விடுத்து உடற்பயிற்சிக் கூடங்களுக்குக் கட்டணம் செலுத்தி உடற்பயிற்சி பெறுவோரும் உள்ளனர்.
நாளாந்த வேலைகள் மூலமாக உடற்பயிற்சி பெறாத பெரிய தலைமுறையொன்று வந்து விட்டது. விளைவு பணக்கார நோய்கள் சிறுவர் முதல் பெரியோர் வரையில் தாராளமாக வந்து விட்டது.

உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வுகள் பாடசாலை மட்டத்திலிருந்தே ஊட்டப்பட வேண்டும். வெறும் ஏட்டுச்சுரைக்காயாக அல்லாமல் கறிக்கு உதவக் கூடியவையாக அவை மனிதர்களிடம் விதைக்கப்படல் வேண்டும்.

மனித வளர்ப்பும் குனிந்து நிமிர்ந்து வளைந்து வளர்ந்த வாழ்வுமே மனிதர்களுக்கு பெரும் ஆரோக்கியத்தைத் தரும்.

நன்றி – தீம்புனல்

Related Articles

Leave a Reply

Back to top button