செல்லப்பிராணி வளர்ப்பு என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு விடயம்தான். அதிலும் எமது நாட்டில் செல்லப்பிராணியாகவும் பாதுகாப்பிற்காகவும் அதிகமாக நாய்களையே வளர்க்கின்றனர். சிலர் அவற்றுக்காக வாழ்விட வசதிகளோடு அனைத்து தேவைகளையும் பார்த்துப் பார்த்து கவனித்துக்கொள்வர். ஒரு சிலரின் நாய் வளர்ப்பு மீதான எதேச்சையான போக்கு பல அசம்பாவிதங்களைத் தோற்றுவித்து விடுகிறது.
அன்றாடம் காலையில் பிள்ளைகளை பாடசாலைக்கு ஏற்றிச் செல்லும் போது எப்போதும் நினைக்கும் ஒரு விடயம் ‘வீதியில் இருக்கும் நாய்களால் விபத்து ஏற்டலாமே’ என்பதுதான். ஏனென்றால் வீதிகளில் அத்தனை நாய்கள் அங்கும் இங்கும் சென்றுகொண்டிருக்கும்.
காலைப்பொழுதென்பது மிக அவசரமும் பரபரப்புமான பொழுது. பாடசாலைக்கும் வேலைகளுக்கும் என பலரும் விரைந்தபடி இருப்பார்கள் . இந்த நேரத்தில் இடையே ஓடும் நாய்களால் நிச்சயமாக இடைஞ்சல்தான் ஏற்படுகிறது. அதிலும் இன்று காலை வாகனத்தில் அடிபட்டு இறந்துகிடந்த நாய் ஒன்றை காகங்கள் கொத்தியபடி இருக்கும் காட்சியைக் கண்டபோது மனதில் ஏற்பட்ட கோபத்திற்கு அளவே இல்லை.
செல்லப்பிராணிகள் என்பது பாதுகாப்பிற்காகவும் சந்தோசத்திற்காகவும்தானே வளர்க்கப்படுகின்றது.
ஒவ்வொருவரும் மனவிருப்போடுதானே செல்லப்பிராணிகளை வளர்க்கின்றனர். அப்படி இருக்கும் போது அவற்றின் மீது அக்கறையின்மை காட்டுவது ஏன்?
காலையில் அவற்றை கட்டவிழ்த்து விடுவதால் அவை வீதிகளில் ஓடுவதும் அது மற்றவர்களுக்கு இடைஞ்சல் தருவதும் தவிர்க்கமுடியாத வேளைகளில் அவற்றின் மீது வாகனங்களை ஏற்றிவிடவேண்டி ஏற்படுவதும் வேதனையான விடயங்கள் அல்லவா.
ஒரு விடயத்தை நாம் நன்றாக உணர்ந்துகொள்ளவேண்டும். நம்மால் இயலுமானவற்றைத்தான் நாம் பொறுப்பெடுக்கவேண்டும். நாய்களைப் பராமரிப்பதற்கு நேரமோ அல்லது ஏற்ற சூழலோ இல்லை என்றால் அவ்விடயத்தை தவிர்த்துவிடவேண்டும். மற்றவர்களுக்கும் பேரிடஞ்சலை ஏற்படுத்துவது தவறு.
இவ்விடயத்தில் கவனமெடுக்கவேண்டிய தரப்புகள் அக்கறை கொள்ளவேண்டும். வீதியில் இறந்துகிடக்கும் நாயை அகற்றி சுத்தப்படுத்துவதைவிட அவை இறக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.
கோபிகை.