இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாமல் ஒழித்தாலே அரசியல் கைதிகளின் விடுதலை உறுதிப்படுத்தப்படும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உலக நாடுகளும் முன்வர வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி ஜே.பிளிங்கென் வலியுறுத்தியுள்ளார். இவ் விடயம் தொடர்பாக வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உலக நாடுகள் முன்வர வேண்டும்” என அமெரிக்க வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஒழுங்கு செய்திருந்த அரசியல் கைதிகள் தொடர்பான கலந்துரையாடலில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி ஜே.பிளிங்கென் கோரிக்கை விடுத்துள்ளதோடு அவர்களது அடையாளத்திற்கான இலக்கை வைத்து சித்திரவதை செய்யப்படுகிறார்கள் எனும் உண்மையை வெளியில் வெளிப்படுத்தியுள்ளமையை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வரவேற்பதோடு இது வெறும் கோரிக்கையாகவோ, அரசியல் வாண வேடிக்கையாகவோ மட்டும் அமைந்து விடக்கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது.
அதேநேரம் அரசியல் கைதிகளாக சிறைகளில் வாடுவோர் தாம் நேசிக்கும் மக்களின் விடுதலைக்காக ஒடுக்குமுறை ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், அவர்களினால் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் செயல்பட்டவர்கள் என்பதையும் அமெரிக்கா நேர்மையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை பயங்கரவாத ஆட்சியாளர்களுக்கு வெளிப்படுத்தி அவர்களுக்காக இராணுவ மற்றும் ஆயுத தளபாட ஒத்துழைப்புகளையும் அமெரிக்கா உட்பட அவர்களின் நேச நாடுகள் நிறுத்த வேண்டும்.
மேலும் சுயநிர்ணய உரிமைக்காகவும் ,தேச விடுதலைக்காகவும் செயல்படுபவர்களை, போராடுபவர்களை பயங்கரவாத பட்டியலில் சேர்த்து ஒடுக்கும் அமெரிக்கா உட்பட அதன் நேச நாடுகள் தவிர்க்க வேண்டும். ஒடுக்கபவர்களுக்கு ஆதரவு வழங்குவதையும் நிறுத்த வேண்டும்.
அதுமட்டுமல்ல இலங்கை உட்பட பல நாடுகள் அரசியல் ஒடுக்கு முறையாகவும், இனவாத ,மதவாத இன அழிப்பிற்காகவும் அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. இது அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயலாகும். இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக சர்வதேசத்திற்கு உறுதியளித்து அதனை இது கால வரை செய்யவில்லை.
புதிய சட்டம் கொண்டு வருவதாகவும் இல்லை. திருத்தங்களை செய்வதாக கூறி அதனையும் மேற்கொள்ளவில்லை. இது சர்வதேசத்தை ஏமாற்றும் செயல் மட்டுமல்ல பயங்கரவாத செயலுமாகும்.இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாமல் ஒழித்தாலே அரசியல் கைதிகளின் விடுதலை உறுதிப்படுத்தப்படும்.
அரசியல் கைதிகளின் விடுதலை என்பது தனியே கைதிகள் சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமல்ல. அவர்கள் சார்ந்த அமைப்பின் அரசியல் கொள்கை சார்ந்த விடயமாகும். அத்தகைய அரசியல் கொள்கை சுதந்திரத்திற்கும் தேசவிடுதலை செயற்பாட்டுக்கும், கருத்து சுதந்திரத்திற்கும் அமெரிக்கா உட்பட வல்லரசு நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும். தமது அரசியல் நலனுக்காக ஒடுக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதை தடுத்தால் மட்டுமே விடுதலை செயற்பாடு கௌரவத்திற்குரியதாகும். அத்தோடு சுதந்திர கலந்துரையாடலுக்கும் வழி வழிவகை உருவாக்கப்படுதலையும் உறுதி
செய்யவேண்டும் என மேலும் தெரிவித்தார்.
செய்தியாளர் கிஷோரன்.