கல்விபுலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

” ஆரம்பக் கல்வியின் ஆதார சுருதி மாமனிதன் அன்பழகன் – யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர்”!!

Anpalakan sir

“நெரு நல்உழன் ஒருவன் இன்று இல்லை எனும் பெருமை உடைத்து இவ்வுலகு”

எனும் பொய்யாமொழிப் புலவரின் வார்த்தைகளின் கனதியை அண்மைய நாட்களில் நான் அதிகம் உணர்ந்தது அன்பழகன் ஆசிரியரின் பிரிவுச் செய்தி அறிந்த அந்தக்கணத்தில்தான்.

நேற்றுவரை எங்களோடு அவர் உள்ளார்.எங்கள் மண்ணின் குழந்தைகளோடு தனது வகுப்பறையில் குதூகலிக்கிறார்.தனது ஆசிரிய நண்பர்களுடன் இணைந்து அடுத்த மட்டக் கற்பித்தல் நுட்பம் குறித்து அளவளாவுகிறார் என்கின்ற நினைப்புத்தான் அவரது பிரிவுச் செய்தியை அறிகின்ற அந்தக் கணம் வரை எங்கள் அதிகமானவர்களின் மனதில் இருந்தது.அது, கொடிய நோயில் இருந்து அவர் மீண்டார் என நாம் இடையிட்டு அறிந்த செய்தியினால் விளைந்த நம்பிக்கையாகக்கூட இருக்கலாம். ஆனால் அந்த நம்பிக்கைகள் அனைத்தும் பொய்த்துப் போய் அவரது பிரிவு நிரந்தரமாகியிருக்கிறது.

எல்லாம் வல்ல பரம்பொருள் சிவபெருமானின் கழுத்தைச் சுற்றி ஊர்ந்து திரியும் பாம்பை நாம் கால சர்ப்பம் என்கிறோம். அந்த, கால சர்ப்பம்தான் எங்கள் காலக்கணக்கை அவதானித்துக் கண்காணிக்கின்ற கடமையைச் செய்கின்றது. அதன் காலக்கணிப்பில் இருந்து எவரும் விலகிச்செல்ல முடியாது. எம்மைப் படைத்த இறைஅருள் எதற்காய் எம்மை படைத்ததோ அந்தக் கடமை நிறைவுற்றதும் எங்கள் காலக்கணக்கை நிறைவுறுத்துகின்றது. கடமைகள் என நாம் சாதாரண மனிதராய் எமக்கு வகுக்கப்பட்ட கடமைகளை முன்னிலைப்படுத்துவோம். ஆனால் முன்வினைப் பயனாய் நாம் கொண்டுவந்த தீவினைப்பயன் நிறைவுற்றதும்தான் எம் கணக்கு முடிவுறுத்தப்படும். அன்பழகன் அவர்கள் கொண்டுவந்த தீவினைக் கணக்கின் அளவு குறைவு என்பதால் வாழ்வின் அரைப்பாகத்தில் கம்பத்தை அண்மிக்கும் போது விடைபெற்றுக் கொண்டார்,மீண்டும் தீவினைக் கணக்கைச் சுமந்து பிறக்காத வாழ்வையும் இப்பிறப்பில் வாழ்ந்து நிறைவுறுத்தினார்.

ஆம் …அன்பழகன் ஒரு அற்புதமான ஆசிரியர்! பலர் ஆசிரியர் எனும் தகைமையால் வாழும்போது ஒரு சிலர் மட்டும்தான் ஆசிரியர்களாகவே வாழ்கின்றனர்,அத்தகையவர்களுள் எமது கல்விச் சமூகத்தில் முக்கியமானவர் அன்பழகன்.குழந்தை மையக் கல்வி,பிள்ளை மையக் கல்வி,மாணவர் மையக்கல்வி என கல்வி உலகில் பேசப்படும் கோட்பாட்டுக் கருத்தியல்களை அன்பழகன் தன் வகுப்பறைச் செயற்பாட்டில் பிரதிபலித்தவர். குழந்தைகளுக்குக் கற்பிக்கும்போது குழந்தையாகவே மாறுகின்ற  அவரது சுபாவம் அவரது தனித்துவ அடையாளம். “ஆரிரியரியல்” எனும் அர்த்தத்தை வலுப்படுத்திய நாம் தரிசித்த தனித்துவமான ஆளுமை அன்பழகன். அன்பழகன் தனது பல்வேறு தனித்துவமான திறமைகளினால் அதிகம் எனது கவனத்தை ஈர்த்தவர். முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பப் பாடசாலைகளின் விளையாட்டு நிகழ்வுகளில், ஓர் அறிவிப்பாளராக அவர் ஆற்றிய பங்கு முக்கியமானது. அவரது அறிவிப்புப்பாணி என்னை அதிகம் ஈர்க்கும். அறிவுறுத்தல்களை வழங்கும் இடைவெளிகளில் நிகழ்வுப் பொருத்தமாக அவர் இடைச்செருகும் சிறு கவிதைகளுக்காகவே அவரது அறிவுப்புக்கு காதுகொடுத்துக் காத்திருந்திருக்கின்றேன். இன்று எல்லாம் கனவாய்,பொய்யாய் பழங்கதையாய்ப் போயிருக்கின்றது. பல மனிதர்களின் பிரிவுத்துயர் என்பது வெறுமனே ஒரு குடும்பத் துயராகவே கடந்துவிடுகின்றது. ஆனால் மிகச் சில மனிதர்களின் பிரிவுத்துயர் என்பது சமூகத்துயராகவே நிலைத்துவிடுகிறது.

அன்பழகனின் பிரிவுத்துயர் அவரது குடும்பத்துக்கு மட்டுமன்றி எமது சமூகத்துக்கும் ஆழ்ந்த கவலையளிக்கும் பிரிவுத்துயராகும்.

பிரிவுத் துயரில் இருந்து மீள்வது என்பது நெருப்பாறுகளை நீந்திக்கடப்பது போன்றது. அறிவின் ஆழத்திலும் தத்துவ விசாரத்திலும் எந்த மட்டத்தில் இருப்பவர்களாலும் தாங்கிக்கொள்ள முடியாத துயராக பிரிவுத்துயர் வரலாறுகள் தோறும் இலக்கியங்கள் தோறும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

தனயனின் பிரிவுத் துயரினால் துவண்ட தசரதச் சக்கரவர்த்தியும் தந்தையினதும் மனைவியினதும் பிரிவுத்துயரினால் துவண்ட அவதார புருசன் இராமனும் கிருஸ்ணரின் பிரிவுத் துயரினால் துவண்ட கோபியரும் கோவலனின் பிரிவுத்துயர் பொறுக்காது பெரும் உளச்சீற்றம் கொண்ட கண்ணகியும் என எங்கள் இதிகாசங்கள் தோறும் பிரிவுத் துயரிற்கான சான்றுகள் நிறைந்து கிடக்கின்றன.

பிரிவுத் துயரில் மீள்வதற்காக, நாம் பிரிந்தவர்களின் பிரிவுத்துயருக்கு உரியவர்களுக்கு எவ்வளவு ஆறுதல்கள் தேறுதல்கள் கூறினாலும் அது இலகுவில் கடந்துவிடும் துயரல்ல. இந்த விதிக்கு அன்பழகனின் அன்புறவுகளும் விதிவிலக்கல்ல.

அன்பழகனின் மனைவி திருமதி . கவிதா அன்பழகன் பல்கலைக்கழகத்தில் எனது மாணவி,விஞ்ஞான பீடத்தில் கல்வியலில் விஞ்ஞானமாணிப் பட்டம் பெற்றவர். அமைதியான சுபாவம் கொண்ட அவருக்கு ஆத்மார்த்த பொருத்தமுடைய இணையாக அன்பழகன் இருந்தார், அவர்களது இனிய இல்லறம் மூன்று ஆண் குழந்தைகளால் சாட்சியம் செய்யப்படுகிறது.

அன்பழகன் இல்லாது கவிதா உணரும் வெற்றிடத்தை அந்தக் குழந்தைகள்தான் நிரப்புகின்றார்கள். அந்தக்குழந்தைகளின் எதிர்காலம் வலுவானதான அமைய வேண்டும். அதை வலுப்படுத்துவதற்காகவேனும் கவிதா பிரிவுத்துயரின் பாரத்தை சமனாக்கவல்ல தன்னம்பிக்கையை தன்னகத்தே உருவாகிக்கொள்வார் என நம்புகின்றேன்,

நல்ல ஆத்மாக்கள், அவர்கள் மண்ணுலகில் வாழும்போது கொண்டுள்ள ஆற்றலைவிட விண்ணுலகம் ஏகிய பின்னர் அதிக ஆற்றலைக்கொண்டிருப்பார்கள். அழிவற்ற அந்த ஆத்மா தன் வல்லமைகளினால் தான் சார்ந்தவர்களின் நலன்களை என்றும் ஆசீர்வதித்தவண்ணம் இருக்கும். அன்பழகனின் ஆத்மாவும் அவரது பிரிய மனைவி, அன்புக்குழந்தைகளைச் சுற்றியவண்ணம் அவர்களைப் பாதுகாக்கும் கவசமான என்றும் இருக்கும்.

எங்கள் பிறப்பின் மூலம் எமது உடலுக்குள் புகுத்தப்படும் ஆத்மா மண்ணுலகத் தொடர்பை நிலைப்படுத்தும்வரை விண்ணுலக தொடர்புடனான தனது நீட்சியைக் கொண்டிருப்பதுண்டு. பிறந்த குழந்தைகளின் முப்பத்தொரு நாள் நிறைவுவரை அவர்களது ஆத்மாவுக்கு அந்தத் தொடர்பு இருக்கும், அதனால்தான் தாயின் முகம் பார்த்துச் சிரிப்பதற்கு முன்னரே தமக்குள் சிரிக்கும் வழக்கம் குழந்தைகளில் இருப்பதுண்டு, தமது முன்னோர்களின் ஆத்மாக்களுடன் அந்தக் குழந்தை பேசி கலந்து மகிழ்ந்தே சிரித்து மகிழ்கின்றது. பின் முப்பத்தொரு நாள் சடங்குடன் விண்ணுலகத் தொடர்பறுந்த ஆத்மா தன் உலகியல் வாழ்க்கையுடன் ஸ்திரப்பட்டுக்கொள்ளும்.

பின் இறப்பு நிகழும்போது உடல் அழிந்தாலும் ஆத்மா அழிவதில்லை, அந்த ஆத்மா தன்னை சார்ந்தோருடனேயே சுற்றிக்கொண்டிருக்கும்.இறப்பின் தன்மையைப் பொறுத்து, குறித்த ஆத்மாவுக்கான அந்திமக் கிரியைகள் செய்யப்படும் நாட்கணக்கு வரை அந்த ஆத்மா தான் வாழ்ந்த இடத்தில் தன்னைச் சார்ந்தோருடன் கலந்தே இருக்கும். இதை நாம் எம் அனுபவங்களிலும் உணரலாம். அவ்வாறு இருக்கும் ஆத்மா தனது பிரிவினால் துயருறும் உறவுகளுக்கு ஆறுதல் ஏற்படத்தக்க காரியங்களைத், தன் வலிமையினால் ஆக்கிவைக்கும். நிறைவில் அந்திமக் கிரியைகளுடன் வாழ்வியியல் சூழலில் இருந்து விலகும் ஆத்மா பின் வேறு வழிகளில் தன் சார்ந்தோரை ஆசீர்வதிக்கும்.

அன்பழகன் போன்ற நல்ல மனிதர்களின் ஆத்மா எல்லோருக்கும் தன் கடமையைச் செவ்வனே ஆற்றி தன் பிரிவால் துயருறுவோருக்கு நம்பிக்கை அளிக்கும் ஏற்பாடுகளை கவச்சிதமாகச் செய்யும்.

இந்தத் தத்துவ உண்மையை அன்பழகனின் மனைவி பிள்ளைகள்,சகோதரர்கள், உறவினர்கள்,சக ஆசிரியர்கள்,மாணவர்கள் அனுபவித்து உணர்ந்திருப்பார்கள். அன்பழகனின் ஆத்மாவின் ஸ்பரிசத்தை அனுபவித்த அவர்கள் அன்பழகன் என்றும் தம்மோடுதான் உள்ளார் என்பதை உணர்ந்து ஆறுதல் அடையவேண்டும். அதற்கான உள வல்லமையை ஆண்டவன் அவர்களுக்கு அருளவேண்டும்.

அன்பழகன் எங்களுள் பலரின் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு அத்திவாரமிட்டவர். அவர் இட்ட அத்திவாரத்தில் நிமிர்ந்து நிற்போர் ஏராளம். அத்தகையதொரு மனிதரின் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு தேவைப்படும் வகைகளில் கை கொடுப்பதற்கும் வழிகாட்டுவதற்குமான ஏற்பாடுகளை இயற்கை நிச்சயமாகச் செய்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அந்தப் பிள்ளைகளின் எதிர்காலம் பயனுறுதியாக அமையவும் அன்பழகனின் ஆத்மா நித்திய பேரின்பப் பெருவாழ்வைப் பெறவும் இறையருளைப் பிரார்த்திக்கின்றேன்.

பேராசிரியர்
சி.சிறீசற்குணராசா
கணிதவியல் பேராசிரியரும்
துணைவேந்தரும்.
யாழ். பல்கலைக்கழகம்,

(அமரர் திரு. அன்பழகன் ஞாபகார்த்தக் கருத்தரங்கு இடம்பெறுவதால் அன்னாரின் கல்வெட்டிலிருந்து குறித்த கட்டுரை பிரதி செய்து பதிவிடப்பட்டுள்ளது.)

Related Articles

Leave a Reply

Back to top button