சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் தொடர் போட்டியை முன்னிட்டு அந்தப் போட்டிக்கான தீபத்தொடர் ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் உலகப்புகழ் பெற்ற நடிகர் ஜாக்கிசான் பங்கேற்று தீபத்தைச் சுமந்து சீனப்பெருஞ்சுவரின் மீது ஓடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது உலக அளவில் வைரலாகி வருகின்றன.
கொரோனா பரவலுக்கு இடையிலும் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் தொடர் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக பெய்ஜிங்கில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்படும் நிலையில் வரும் 6 ஆம் தேதி துவங்கி இந்தப் போட்டிகள் அனைத்தும் வரும் 20 ஆம் தேதியோடு முடிவடையவுள்ளது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு நடத்தப்படும் தீபத் தொடர் ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் 67 வயதான நடிகர் ஜாக்கிசானும் கலந்துகொண்டுள்ளார். நேற்று நடிகர் ஜாக்கிசான் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திக்கொண்டு சீனப் பெருஞ்சுவரின் மீது ஓடிவந்தார். முன்னதாக அந்நட்டின் கோடைக்கால அரண்மனையில் துவங்கிய இந்த தீபத்தொடர், சீனப்பெருஞ்சுவர் மற்றும் முக்கிய அடையாளச் சின்னங்களை கடந்து செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டுகளைப் போல இந்தத் தீபத்தொடர் ஓட்டம் அதிக தூரம் இருக்காது எனவும் கூறப்படுகிறது.
நேற்று சீனப் பெருஞ்சுவரில் தீபத்தை ஏந்திக் கொண்டு ஓடிய நடிகர் ஜாக்கிசான் இதற்காக அதிகாலை 4 மணிக்கே எழுந்து ஆவலுடன் காத்திருந்ததாகக் கூறியுள்ளார். மேலும் அவர் இதுவரை 4 முறை குளிர்கால ஒலிம்பிக் தீபத்தை ஏந்திக்கொண்டு ஓடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய வரலாற்று மிக்க விளையாட்டில் நடிகர் ஜாக்கிசான் பங்கேற்று இருப்பது இளம் வீரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.