எம் இருவரையும் உள்ளே அழைத்த அந்த அதிகாரி, “அமருங்கள் …..” என்ற போது, ஒரு இருக்கையை இழுத்து சரிப்படுத்தி, கைகளால் சைகை செய்து, என்னை அமரச்சொல்லி, தலையசுத்த பின்னரே, தான் அமர்ந்து கொண்ட தேவமித்திரனின் பண்பான அன்பு, என்னை அசரவைத்துவிட்டது.
எங்கள் இருவரையும் நன்றாகப் பார்த்த அதிகாரி, “இருவரும் ஏற்கனவே திட்டமிட்டா இதனைச் செய்கிறீர்கள்?” என்றார்.
எனக்கு எதுவும் புரியவில்லை…நான் தேவமித்திரனைப் பார்த்தேன். அவரும் என்னைத் தான் பார்த்தார்.
“புரியவில்லை…..” என நான் இழுத்த போது,
“இல்லை……இருவரும் ஏற்கனவே தெரிந்தவர்களா? ” என்றதும்
“ஆமாம்…..ஓரளவு தெரியும் ” தேவமித்திரன் உடனே சொன்னதும் என்னை அறியாமல் எனக்குள் கோப ஊற்று, பீறிட்டுக் கிளம்பியது.
“ஓரளவு தெரியுமாம்….கொழுப்பு தான்….”எனக்குள் நானே திட்டிக்கொண்டேன்.
உள்ளே வரும் போது ஏற்பட்ட இனிமை எங்கோ தொலைந்து போயிற்று.
அதிகாரி தொடர்ந்தார்…
“ஏன் கேட்கிறேன் என்றால், இந்தக் காலத்தில் நீங்கள் இருவரும் எடுத்துள்ள இந்த முடிவு, உண்மையில் பாராட்டிற்கு உரியது. காலம் எதையோ நோக்கி, எங்கோ ஓடிக்கொண்டிருக்க, நீங்கள் இருவரும் இவ்வாறானதொரு சமூகச் செயல்பாட்டிற்கு முன்வந்திருப்பது, மிகச் சிறப்பான ஒரு விடயம்…..முதலில் இருவருக்கும் எனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் சொல்லிக்கொண்டிருக்க, பதுங்கியிருந்த விலங்கொன்று மெல்ல தலையை நிமிர்த்திப் .பார்ப்பது போல, சிந்தனை சற்றே தலைதூக்கியது.
‘இவர் என்ன சொல்கிறார்…..நான் வண்ணமதியைத் தத்தெடுத்து மகளாக ஏற்கப்போகிறேன்….தேவமித்திரன்….’ எண்ணத்தின் ஓட்டத்தில், ‘தேவமித்திரன், ஒரு சிறுவனைத் தத்தெடுப்பார்’ என்ற நினைப்பு எனக்குள் வரவேயில்லை.
அந்த அதிகாரி மேலே பேசப்பேசத்தான் எனக்குள் அந்த விடயம் முழுதாக இறங்கியது.
‘அடடா….என் வரனும் ஒரு சிறுவனைத் தத்தெடுத்து வளர்க்கப்போகிறாரா….’
மனதிற்குள் மத்தாப்பூக்கள் மலர்ந்தன.
ஆறடி உயரமும், அழுத்தமான தோற்றமுமாக அமர்ந்திருந்த தேவமித்திரன்., ஒரு ரோமானியச் சிற்பத்தைப்போல தோன்ற, சற்றே திரும்பி நன்றாகவே பார்த்தேன்.
தேவமித்திரனுக்கும் அவர் சொன்ன தகவல் மகிழ்ச்சியான அதிர்ச்சி கொடுத்திருக்க வேண்டும்.
நன்றாக என்னைப் பார்த்த அந்தப் பார்வையில் இருந்தது, ஆச்சரியமா, மெச்சுதலா, பாராட்டா, அதையும் தாண்டிய ஏதோ ஒன்றா….
நாணம் என்னை நனைக்க, சட்டென்று அதிகாரியின் புறமாகத் திரும்பிவிட்டேன்.
அவர் மேலும் சில விஷயங்களைச் சொல்லி விட்டு, கையொப்பமிடுவதற்கான தாள்களை நீட்டியபடி,
“நிரப்பிவிட்டு, உங்கள் மகளை அழையுங்கள் சமர்க்கனி” என்றார்.
என் ஓரப்பார்வையில் விழுந்த தேவமித்திரன், அதிர்ச்சியில் உறைந்திருப்பது புரிந்தது.
‘ஏன்….என் பெயர் தான், தேவமித்திரனுக்குத் தெரியுமே…’ நினைத்த போது தான் அந்த விசயம் எனக்குள் ஓடி உறைத்தது.
நான் முகநூலில் ‘காரிகா’ என்கிற எனது புனைபெயரைத்தானே பயன்படுத்துகிறேன். அதனால் தான் எனது பெயர் தேவமித்திரனுக்குத் தெரியவில்லை…உருவத்தில் நான் மாறிவிட்டேன் தானே….
எங்கள் இருவரதும் கையொப்பமிடலுக்குப் பின்னர், வெளியே நின்ற சிறார்கள் இருவரும் அழைக்கப்பட்டனர்.
‘அகரன் வா ….வா’ தன்னருகே அந்தச்சிறுவனை கைநீட்டி அழைத்த தேவமித்திரன், வண்ணமதியைப் பார்த்து, ஆழமான அன்பு ததும்ப புன்னகைத்ததை கண்டு எனக்குள் நேசச்சுவடுகள் ஒரு இனிய கற்பனையை அள்ளித் தெளித்தது.
அங்கு செய்யவேண்டிய அனைத்து அலுவலக நடைமுறைகளையும் முடித்துக்கொண்டு நாங்கள் நால்வரும் வெளியே வந்த போதுதான் தேவமித்திரன் கேட்டார்….
“நீ…நீங்கள்….சமர்க்கனியா?”
தீ …..தொடரும்.