சமூக ஊடகங்களில் புதிய கட்டுப்பாடு – அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!!
Social media
சமூக ஊடகங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் வகையில் புதிய அதிகாரசபையொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளது. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் இதன்மூலம் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
அதன்பிரகாரம் சமூக வலைத்தளப் பதிவுகள் எவ்வாறானதாக அமையவேண்டும் என்பது தொடர்பில் ஒழுங்குவிதிகள் நிறுவப்பட்டுள்ளதாக அரச உயர்மட்டத் தகவல்கள் ‘தமிழன்’ நாளிதழுக்குத் தெரிவித்தன.
இவ்வாறு சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் அமைச்சரவை அனுமதிக்கென தயாரிக்கப்பட்ட பத்திரம் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் கடந்த திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்படவிருந்தது. எனினும், அன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறாத காரணத்தினால் அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களையும் ஒழுங்குபடுத்துவது தொடர்பில் ஒலி/ஒளிபரப்பு அதிகாரசபையொன்றை நிறுவுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதிகாரசபையை நிறுவுவதற்கும் அது தொடர்பிலான சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்குமான வரைவுகளைத் தயாரிக்கும் பணிகள் இடம்பெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களுக்கும் இது பொருந்துமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.