கதைமுத்தமிழ் அரங்கம்.

“பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளைச் சேரும் என்பதை விளக்கும் குட்டிக்கதை!” 

Story

குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம், கிருஷ்ணா! நான் குருடனாக இருந்த போதும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர் கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார்.

கிருஷ்ணர் – உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். என்றார். கதையை சொல்ல ஆரம்பித்தார்…

நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையாக சமைப்பது, அவரை பிரத்தியேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.

அரசருக்கு வித்தியாசமான சுவையை செய்து கொடுத்து பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை ஒன்று தோன்றியது. அதன்படி அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து அரசருக்குப் பரிமாறினான். தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அச்சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு, அடிக்கடி சமைக்குமாறு கட்டளையிட்டார். அதோடு அந்தச் சமையல்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்.

திருதராஷ்டிரா! இப்போது சொல் என்றார் கிருஷ்ணன்..

அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார்.

வசிஷ்டரின் சமையல்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்து விட்டார். ஆயினும் அதை வசிஷ்டர் கண்டு பிடித்து, அவனுக்கு சாபமிட்டார், அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே! சமையல்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் ,அவன் செய்த தவறு சிறியது. ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன் தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான் என்றார் திருதராஷ்டிரன்.

புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா நீயும் ஓர் அரசனாக இருந்தும், “நியாயம் தவறாது” “மன்னன் செய்ததே தவறு” எனக் கூறினாய்.அத்தகைய நீதிதான் பீஷ்மர், துரோணர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கை யைத் தந்தது.

ஆனால், நான் சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய்.

அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய வேதனை அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்து கொள்கிறாய். ஆனால் தினம் தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கு இடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உனக்கு கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய்.

தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே, அவரவர் வாழ்வு அமையும்! என்றார்.

தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான்.

நாம் செய்த தவறுகள் நம் பிள்ளைகளைச் சேரும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்வோம். நல்லதே நினைப்போம்!. நல்லதே செய்வோம்!                 

நன்றி: பிரதி செய்யப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button