நடுத்தர குடும்பங்களை கடன் திட்டத்தின் மூலம் உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை!!
loan
இலங்கையில், மக்கள், வறுமையால் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்காக புதிய கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இன்று நாடாளுமன்றில் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் இந்த கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், தங்களது தொழிலை தொடர்ந்தும் கொண்டுநடத்துவதற்கு தேவையான செயல்பாட்டு மூலதனத்துக்கான கேள்வி அதிகமாக காணப்படுகிறது.
எனவே, நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில் முயற்சியாளர்களை மீண்டெழச் செய்வதற்கும் அவர்களது செயல்பாட்டு மூலதன தேவையை பூர்த்திசெய்வதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் நிதியமைச்சு என்பவற்றுக்கு இடையில் 13.5 மில்லியன் டொலருக்கான (4,900 மில்லியன் ரூபா) இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, 8 வங்களின் ஊடாக இந்த கடனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, ஹட்டன் நெஷனல் வங்கி, கொமர்ஷல் வங்கி, செலான் வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி, நேஷன் ட்ரஸ்ட் மற்றும் சம்பத் வங்கி ஊடாக இந்த கடன்களை பெறமுடியும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, விவசாய மற்றும் சுற்றுலா துறைகளில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களும் இந்த கடனை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.
சந்தையில் தற்போது கடன் வட்டி வீதம் 20 – 25 சதவீதமாக காணப்படுகிறது. எனினும், இந்த கடன் 11% என்ற குறைந்த வட்டி வீதத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதனூடாக, ஆகக்கூடியது 100 மில்லியன் ரூபா வரை கடனாக பெறமுடியும்” எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.