இரண்டு தமிழ் இளைஞர்கள் மியான்மர் நாட்டில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வழும் மோரே பகுதியில், மோகன் மற்றும் அய்யனார் ஆகியோர் வசித்து வந்தனர்.
இவர்கள் இருவரும் , அண்டை நாடான மியான்மரின் தாமு எனும் பகுதியை சேர்ந்த, தங்களது நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக , உரிய அனுமதியின்றி எல்லை தாண்டி மியான்மருக்கு சென்றுள்ளனர்.
இதன்போது மியான்மர் ஆயுதப்படைக் குழுவால் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் ஒருவர் 28 வயதான மோகன் என்பதும், ஆட்டோ ஓட்டுநரான அவருக்கு இரு வாரங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றதாகவும் தெரிய வந்துள்ளது.
அதேவேளை மற்றொரு நபரான 35 வயதான அய்யனார் என்பவர் சிறு வியாபாரி என கூறப்படுகின்றது. இந்நிலையில் உரிய அனுமதியின்றி இருவரும் மியான்மர் எல்லைக்குள் நுழைந்ததால், அவர்களை உளவாளிகள் என கருதி அந்நாட்டு ராணுவத்தினர் சுட்டுக் கொன்று இருக்கலாம் என மோரே தமிழ் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை இருவரையும் பயங்கரவாதக் குழுவினர் சுட்டு கொன்றதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ள அதேவேளை உயிரிழந்தவர்களின் உடல்களை, இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற்து.
மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து அந்த நாட்டுடனான சர்வதேச எல்லை மூடப்பட்டபோதும், வர்த்தக தேவைகளுக்காக இரு நாட்டு மக்களும் எல்லைகளை கடந்து செல்வது வழக்கம் என மோரே வாசிகள் கூறுகின்றனர்.