இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கரன்னாகொட மீதான குற்றச்சாட்டுக்கள் நீக்கப்பட்டமை அரசியல் ரீதியானது – தாக்கல் செய்யப்பட்டது மனு

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட(Wasantha Karannakoda) மீதான குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டமை அரசியல் ரீதியானது எனத் தெரிவித்து நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு வலிந்து காணாமல்போகச் செய்யப்பட்ட சம்பவம் தெடர்பிலான வழக்கின் பிரதிவாதியாக வசந்த கரன்னாகொட குறிப்பிடப்பட்டிருந்தார்.

கப்பம் கோருதல், கடத்தல், காணாமல் போகச் செய்தமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கரன்னாகொட மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எனினும், பின்னர் இந்தக் குற்றச்சாட்டுக்களை மீளப் பெற்றுக்கொள்வதாக சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்திருந்தது.

எனினும், எந்த அடிப்படையில் குற்றப்பத்திரிகை கைவிடப்பட்டது என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டுமென காணாமல் போனவர்களின் உறவினர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்ட விவகாரம் அரசியல் ரீதியானது, பக்கச்சார்பானது, சட்டவிரோதமானது எனத் தெரிவித்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த கடத்தல்களுடன் கடற்படைத் தளபதி உள்ளிட்ட சில கடற்படையினருக்கு நேரடித் தொடர்பு இருப்பது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த மனு எதிர்வரும் 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button