கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவால் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அமெரிக்கா இதுவரையில் 2.5 பில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவியை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.
மேலும் 800 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இராணுவ உதவியை வழங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
கிழக்கு உக்ரைனில், ரஷ்யாவினால் நடத்தப்படவுள்ள தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக, இந்த கனரக ஆயுதங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் பீரங்கிகள், கவச இராணுவ வாகனங்கள், வெடிபொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் ஆளில்லா கடலோர காவற்படை கப்பல்கள் என்பன இதில் அடங்கும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஸெலன்ஸ்கியுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.