தினம் : ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10.00 மணி
அமைதியாக இருந்தது அந்த சந்தை வளாகம். ஓரிரண்டு பேர் தான் பொருட்கள் வாங்குவதற்காக வந்து சென்றுகொண்டிருந்தனர். அனைத்தையும் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தேன். அப்போதுதான் இரு பெண்களின் உரையாடலை கேட்க முடிந்தது.
வானதியும் வெண்ணிலாவும் அருகருகே அமர்ந்து மரக்கறி வியாபாரம் செய்பவர்கள். அவர்கள் இருவரும் நடுத்தர நிலையில் வாழும் பெண் தலைமைத்துவ குடும்பத்தினர். வறுமையோடும் வாழ்வோடும் போராடி சற்றே மீண்ட நேரம் மீண்டும் பொருளாதார நெருக்கடி தலைதூக்கி அழுத்த முனைகிறது. அவர்கள் பேசிக்கொண்ட விடயங்கள் இங்கே எமது வாசகர்களுக்காக…..
வானதி: என்ன வெண்ணிலா, நேரம் பத்து மணியாகுது, பெரிசா சனத்தைக் காணேல்ல….
வெண்ணிலா : அக்கா….இது இப்ப கொஞ்ச நாளா வழமைதானே, சனத்திட்ட காசு இருந்தாதானே கொண்டு வந்து பொருட்களை வாங்க,….அரிசி, மா, சீனி
உந்த விலை விக்கேக்க என்னக்கா செய்யேலும்….?
வானதி : ஆரிட்ட போய் சொல்லுறது, முதலெண்டாலும் ஏதோ வாற வருமானத்தில வீட்டுச் செலவும் பாத்து பிள்ளையளின்ர படிப்புச் செலவும்
பாத்தம்…அப்பிடி இப்பிடியெண்டு சின்னத் தொகையை சேமிக்கவும் முடிஞ்சுது…இப்ப வீட்டுச் செலவுக்கே வருமானம் காணாம கிடக்கு….
வெண்ணிலா: ஓமக்கா…பிள்ளையளுக்கு சாப்பாடும் ஆனதா குடுக்கிறேல்ல…பவுண் விலையைப் போலதான் பால் விலையும் எகிறுது.
வானதி : அது சரி….நாங்களாவது பரவாயில்ல, எங்கட பிள்ளையள் கஞ்சி குடிச்சிட்டேனும் பள்ளிக்கூடம் போகுதுகள், எங்கட மாமி வீட்டுக்குப்பக்கத்தில
இருக்கிற கலையரசி அக்கா வீட்டில பசி கிடந்து, ஏலாம பிள்ளையள் பள்ளிக்கூடமே போகேல்லையாம்.
வெண்ணிலா: இதென்ன அக்கா கொடுமையா கிடக்கு, உந்த கொரோனா நேரத்தில வெளிநாட்டில இருந்த எங்கட உறவுகள் எல்லாம் மாறிமாறி காசு
அனுப்பி பொருட்களா வாங்கி குடுத்தவை. இப்ப அப்பிடி குடுக்கினம் இல்லை….
வானதி : ஓம் வெண்ணிலா, அதுவும் தேவைக்கு அதிகமாவும், வசதியிருந்தவைக்கும் எண்டு பார்த்துப்பாராமல் குடுத்தவையள், இப்ப
அதைவிட மோசமான கஷ்ரம் வந்திருக்கிகுது. அவையளுக்கும் பொருளாதார நெருக்கடி இருக்கு தான், ஆனா, இயலுமானவையள்
செய்யலாம். இப்பதான் கட்டாயம் அப்பிடியான உதவிகள் தேவை.
வெண்ணிலா : அக்கா..நானெல்லாம் இப்ப காலைச்சாப்பாடு தேடுறதே இல்லை…ஒரேயடியா மதியத்துக்கு சமைச்சுத்தான் குடுக்கிறது, பயறு, கௌபி
எண்டு ஒண்டும் வாங்கேலாது, ஏதோ மிஞ்சிற காய்கறியை கறி வைக்கிறனான்….
வானதி : இப்பதான் எங்கட மக்களுக்கு கட்டாயம் சாப்பிட பொருளுதவி வேணும், மற்றது, நேற்று எங்கட மகான் ஐயா வீட்ட போனனான், உனக்கு
தெரியும்தானே, உந்த உலகத்து விசயம் எல்லாம் அந்த மனுசனுக்கு தெரியும், வாசிக்கிறதெண்டால் அவருக்கு ஒரு கலை…தேடித்தேடி
வாசிக்கிற ஒரு ஞானச்சுடர் அந்த ஐயா, அவர் சொன்னவர், பிரதேச கபைகளிலையும் நல்ல நிதி இருக்காம், . அது சரியான
காரணங்கள் காட்டித்தான் எடுக்கவேணுமாம், இப்ப இருக்கிற நிலைமையை அரசாங்கத்திற்கு விளக்கி அந்த நிதிகளிலையும் மக்களுக்கு
உதவிகள் செய்யலாம்.
வெண்ணிலா : ஓமக்கா..பிரதேச சபை தவிசாளர்மார் ஆர்ப்பாட்டம் செய்தேனும் அந்த நிதியை எடுத்து சனத்துக்கு பொருளுகளை வாங்கி
குடுக்கலாம்தானே, எத்தினையோ வீடுகளில ஆரோக்கியமான சாப்பாடே இல்லை, பால்மா வாங்கமுடியாது, உழுந்து ஏகப்பட்ட
விலை…இறைச்சி, முட்டை வாங்கேலாது, மீனும் விலைதான்….அரிசி, மா, சீனி, பருப்பு, சோயா இதுகளை குடுத்தாலும் ஒரளவுக்கு இருக்கிற
காசில மற்ற பொருளுகளை வாங்கி சமாளிச்சுப் போடலாம்
…
வானதி : எங்கட புலம்பெயர் உறவுகள், கொரோனா நேரம், அளவுக்கதிகமா குடுத்தவையள், இப்ப யோசிச்சு உதவிகள் செய்யவேணும், அண்டைக்கு
பாத்தியே, பசியில ஒரு பிள்ளை திருடினதெண்டு கொட்டனால அடிச்சவங்கள், எனக்கு ஈரக்குலையே நடுங்கிப்போச்சுது, ஏதோ நாங்கள் இருக்க
கண்டு எங்கட பிள்ளையள் பட்டினி இல்லாமல் இருக்குதுகள்...இல்லாட்டி உப்பிடித்தானே நிலைமை வரும்.
வெண்ணிலா : ஓமக்கா….அது உண்மைதான்…நானும் பாத்தனான்..இது பசி, பட்டிணி காலம் போல…நடக்கிற போராட்டமோ ஆர்ப்பாட்டமோ
நடக்கட்டும்….அது தீர்வாகிற வரையில இஞ்ச சனங்கள்
செத்திடுங்கள் போல கிடக்கே,
வானதி : எங்கட புலம்பெயர் உறவுகளிட்ட ஒரு விண்ணப்பம் வைக்கவேணும்….. நடுத்தரவர்க்கம் இப்ப வறுமையிலையும் வறுமை இப்ப அதிவறுமையிலையும் போட்டுதெண்டும், முடிந்தவர்கள் தங்கட ஊரில உறவில வேற இடங்களில எண்டு சரியான தகவல் எடுத்து உண்மையில வறுமையில உள்ள ஆக்களுக்கு உதவவேணும்.
வெண்ணிலா : நாங்கள் வேற ஆரிட்ட கேட்க முடியும், எங்கட புலம்பெயர்ந்த உறவுகள் தானே அப்ப தொடங்கி இப்ப வரைக்கும் எங்களுக்காக
உதவுகினம்…
வானதி : அதெண்டா உண்மைதான்…..வெண்ணிலா..எங்களுக்கான மீட்சியும் நீட்சியும் அவையளின்ர கையிலதான் இருக்கிறது. அவையள் புரிஞ்சு கொள்ளுவினம்.
ஆக்கம் – கோபிகை