பனிப்பொழிவு காரணமாக அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் தொடர் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
தற்போது அங்கு கடுமையான பனிப்பொழிவு காணப்படுகின்றது. இதன்காரணமாக நெடுஞ்சாலையில் அளவுக்கு அதிகமாக பனிகொட்டியது. இதனால் நெடுஞ்சாலை முழுவதும் பனித்துகள் குவிந்தன. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்ததால் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் பல அடுத்தடுத்து விபத்தில் சிக்கின.
சாலையில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி கிடப்பது தெரியாமல், ஒன்றன்பின் ஒன்றாக வந்த மற்ற வாகனங்களும் விபத்துக்குள்ளாகி கிடந்த வாகனங்கள் மீது மோதி கவிழந்தன. இப்படி கார்கள், லாரிகள் உள்பட 50-க்கும் அதிகமான வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சங்கிலி தொடர் விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனிடையே பனிப்பொழிவில் கார்கள் மற்றும் லாரிகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.