கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்ட ஒரு கார். இது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது.
கலிபோர்னியாவில் வசித்துவந்த ஜே ஒல்பெர்க் என்பவர் ஒரு கார் பிரியராக இருந்து வந்துள்ளார். இவர் 60 அடி நீளம் மற்றும் 26 சக்கரம் பொருத்திய காரை கடந்த 1986 ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்தக் கார் “தி அமெரிக்கன் ட்ரீம்“ என்ற பெயரில் அன்றைய காலக்கட்டத்தில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
டெசர், மேனிங் ஆகிய இருவர் இணைந்து 2 வருடங்களுக்குப் பிறகு ஒரு புது மாதிரியான காராக உருவாக்கியுள்ளனர். 60 அடி காரை 100 அடி நீளத்திற்கு மாற்றி 75 பேர் பயணம் செய்யக்கூடிய வகையிலும் டிவி, ப்ரிட்ஜ், ஷோபா செட், சிறிய கோல்ப் விளையாட்டு அரங்கம், சிறிய நீச்சல் குளம் மற்றும் வலிமையான ஒரு ஹெலிபேட் என்பன உள்ளடங்கியதாகவும் மாற்றியுள்ளனர்.
மேலும் 26 சக்கரங்களைக் கொண்ட இந்தக் காரை அதன் இருபக்கங்களில் இருந்தும் இயக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இதனால் “தி அமெரிக்கன் ட்ரீம்“ கார் தற்போது லிமோ என்ற பெயரில் தனது பழைய சாதனையை முறியடித்து மீண்டும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறது.