கால்களை இழந்த இந்த ஒற்றைப் பறவையின்
ஓலம் கேட்கிறதா என் இனமே
அங்கமிழந்தும் பீனிக்ஸ் பறவையாய் எழுந்து நின்றவளின்
ஊனத்தின் மேல் நின்று
கதகளி ஆடுகிறீர்கள்
படிக்காதவள் என்றறிந்து
நான் பேசுகின்ற மொழியாலே
ஏளன வார்த்தை புரிகின்றீர்
வீசுகின்ற காற்றும் எனக்கு
அனலாகக் கொதிக்கிறதே
நாவறண்டு போனாலும் கானமிசைக்கும்
பாலைவனத்து ஒற்றைக் குயிலைப்போலவே நானும்
உப்புக்காற்றோடு வாழ்ந்து கழித்தவள்
என் மனம் அமைதியிழந்து போனாலும்
தேய்பிறையைப் பார்த்து நம்பிக்கை
கொள்பவள்
மீண்டுமொரு முறை என் மனதை காயம் செய்யாதீர்
வாசமுள்ள மலராக நானும்
ஒரு காலத்தில் போற்றப்பட்டவள் என்பதை மறந்து விடாதீர்கள்.
பிரபாஅன்பு