வலி .தென் மேற்கு பிரதேசசபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோ மீது பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளதுடன் வீட்டில் இருந்த தாய் மற்றும் தங்கை மீதும்
தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இத் தாக்குதலில் பாதிப்படைந்த பிரதேச சபை உறுப்பினர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பொலிசாருடனான தர்க்கத்தின் போது மயக்கமடைந்த அவரது தாய், தங்கை ஆகியோர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இத் தாக்குதலில் அவரது தந்தை காயமடைந்திருந்தார். இவ்விடயம் குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. சந்தேகநபர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். பிரதேச சபை உறுப்பினரும் அவரது குடும்பமும் தன்னை தாக்கியதாக கூறி மேற்படி சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் , பிரதேச சபை உறுப்பினர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இன்று மாலை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த பிரதேச சபை உறுப்பினர் பொலிஸ் நிலையம் செல்வதற்கு முன்னர் வீட்டிற்கு வருகை தந்த பொலிசாரினாலேயே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர். மயக்கமுற்றிருந்த அவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பாது அங்கேயே தடுத்து வைத்திருந்த நிலையில் பிரதேச சபை உறுப்பினர்களின் நண்பர்கள் மூலமாகவே அவசர வைத்திய சேவையின் மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.