கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களினால் நாட்டுக்கு பணம் அனுப்பப்படும் வீதம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 61.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய வங்கியின் தரவுகளுக்கு அமைய, ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு 259.3 மில்லியன் டொலர் பணம் அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை பணியாளர்கள் சட்டபூர்வமற்ற வழிகளினூடாக அதிக விலைக்கு பணத்தை அனுப்புவதால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை மத்திய வங்கி நிலையாக வைத்துள்ளது.
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 203 ரூபாவாக உள்ளது.
பணவனுப்பல்களை ஊக்குவிக்கும் நோக்கில் வர்த்தக வங்கிகளுக்கு ஒரு டொலருக்கு 10 ரூபாவை மேலதிகமாக செலுத்துவதற்கு மத்திய வங்கி அனுமதியளித்துள்ளது.
எனினும் நாணய மாற்று சந்தையில் ஒரு டொலருக்கு 245 ரூபா வரை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.