யுக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் ஊடுருவியதாகத் தெரிவிக்கப்பட்டு சில மணித்தியாலங்களில்சுமார் 50 ரஷ்ய துருப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக யுக்ரைன் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
கிழக்கு கார்கிவ் நகருக்கு அருகில் உள்ள வீதியில் நான்கு ரஷ்ய கவச வாகனங்களை அழித்ததாகவும் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் ஒரு நகரத்திற்கு அருகே ஐம்பது துருப்பினர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஏழாவது ரஷ்ய விமானம் நாட்டின் கிழக்குப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக யுக்ரைன் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தனது விமானங்கள் அல்லது கவச வாகனங்கள் அழிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை ரஷ்யா மறுத்துள்ளது.
யுக்ரைனின் தெற்கு கெர்சன் பகுதியில் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் யுக்ரைனின் எல்லைப் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, ரஷ்யா தனது யுத்த வாகனங்களை உக்ரைனுக்குள் செலுத்த ஆரம்பித்துள்ளதாகவும் யுக்ரைன் தலைநகரில் உள்ள பிரதான விமான நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கு யுக்ரைனில் ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கைகளை அதிகாரபூர்வமாக தொடங்கிய சிறிது நேரத்திலேயே கவச வாகனங்கள் யுக்ரைனுக்குள் நுழைந்தன.
நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் இந்த நெருக்கடியான தருணத்தில் யுக்ரைனுடன் தனது அமைப்பு ஆதரவளிக்கும் எனக் கூறியுள்ளார்.
அனைத்து நட்பு நாடுகளையும் பாதுகாக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
யுக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நேட்டோ தலைவர் கண்டித்துள்ளார்.
இதனிடையே கிழக்கு யுக்ரைன் துருப்புக்களை ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு பின்வாங்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கோரியுள்ளார்.