நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் சச்சினை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதையடுத்து 15 ஆவது சீசனுக்கான போட்டியில் அவர் கலந்துகொள்ள இருக்கிறார். இந்நிலையில் தனது மகன் அர்ஜுனை பற்றி சச்சின் டெண்டுல்கர் சில சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில் அர்ஜுன் விளையாடுவதை நான் நேரில் சென்று பார்க்க மாட்டேன். அது அர்ஜுனுக்கு கடும் அழுத்தத்தைக் கொடுக்கலாம். எந்தப் பெற்றோரும் தனது குழந்தைகளின் விளையாட்டைப் பார்க்க போகும்போது அவர்களுக்கு அழுத்தமாக முடிந்துவிடலாம். நான் இதுவரை அர்ஜுன் விளையாட்டை பார்த்ததேயில்லை. ஒருவேளை நான் அப்படி செய்தால் அர்ஜுனுக்கு தெரியாமல் அவருடைய பயிற்சியாளருக்கும் சொல்லாமல் ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டுதான் பார்ப்பேன் எனக் கூறியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ள இந்தக் கருத்து பலரது மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பொறுப்புள்ள ஒரு தந்தையாக இவரின் கருத்து இருக்கிறது எனப் பலரும் கூறிவருகின்றனர். அர்ஜுன் சச்சின் முன்னதாக Under 19 கிரிக்கெட் அணியில் விளையாடி வந்தார். தொடர்ந்து சையத் முஷ்டாக் தொடருக்காக மும்பை இந்திய அணி சார்பில் கடந்த ஆண்டு களம் இறங்கினார்.
இடதுகை பேட்ஸ் மேன் மற்றும் பந்துவீச்சாளரான அர்ஜுன் அந்தப் போட்டியில் 3 ஓவர்கள் வீசி 34 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தின்போதும் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது. இந்த ஆண்டு ஏலத்தின்போது குஜராத்தும் ஏலம் கேட்டதால் கடைசியில் மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.30 லட்சத்திற்கு ஏலம் எடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.