கடந்த சில மாதங்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் எல்லையில் சுமார் 1,30,000 வீரர்களை ரஷ்யா குவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் மால்டோவா நாட்டின் விமானம் ஒன்று வானில் ‘ரிலாக்ஸ்’ என்ற வடிவில் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லையிலிருக்கும் ரஷ்ய ராணுவ வீரர்கள் தீவிரப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், எந்த நேரமும் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நிலவும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
உக்ரைன் நாட்டிற்கு அருகே உள்ள மால்டோவா நாட்டின் தேசிய விமான நிறுவனம் ஏர் மால்டோவாவின், பயணிகள் விமானம் ஒன்று மால்டோவா நாட்டின் தலைநகரான கிஷினேவில் இருந்து ‘ரிலாக்ஸ்’ (Relax) என்ற என்ற ஆங்கில வார்த்தையின் வடிவப் பாதையில் சென்றுள்ளது.
அந்த வீடியோவை ‘பிளைட் ரேடார்’ என்ற விமானப் போக்குவரத்து கண்காணிப்பு இணையதளம் மூலம் நேரடி ஒளிபரப்பும் செய்துள்ளது.
இந்த வீடியோவை பார்த்த பார்வையாளர்கள் உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போர் பதற்றத்தை தணிக்கும் ஒரு முயற்சியை இதன் மூலம் மேற்கொள்வதாக கருதி பலரும் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைரலாக்கியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த விமானம் ஒரு வானொலி நிலையத்திற்கான விளம்பரத்திற்காக அவ்வாறு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
தலைநகர் கிஷினேவில் இருந்து மாலை 4.12 மணிக்கு கிளம்பிய அந்த விமானம் ஒரு மணிநேரம் 40 நிமிடங்கள் வானில் ரிலாக்ஸ் என்ற வடிவில் பயணம் செய்து 5.50 மணிக்கு மீண்டும் கிஷினேவில் தரையறங்கியது.