நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் காட்டப்படும் அநீதிக்கு எதிராகவும் நியாய கோரிக்கையை முன்வைத்தும் மலையக அரசியல் அரங்கம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பொது மக்களின் கையெழுத்துக்களை
பெறும் நிகழ்வு நேற்று (03) கிளிநொச்சியில் இடம்பெற்றது.
இதன் போது மலையக அரசியல் அரங்கம் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
ம. திலகராஜ் கிளிநொச்சி ஊடக அமையத்தில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
“நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆக உள்ள பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை 10 ஆக
அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை
2018 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது.
அமைச்சரவை அனுமதியின் பின்னர் புதிய பிரதேச செயலகங்கள் தொடர்பில் 2019 இல் வர்த்தமானி அறிவித்தலும்
வெளியிடப்பட்டது. அந்த வர்த்தமானி அறிவித்தலில் நுவரெலியாவில் புதிதாக
ஐந்து பிரதேச செயலகங்களும், காலியில் 3 பிரதேச செயலகங்களும் நிறுவப்பட
வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இதன்படி காலி மாவட்டத்தில் மூன்று பிரதேச செயலகங்கள்
உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நுவரெலியா மாவட்டத்துக்கான பிரதேச செயலகங்கள்
நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கு பதிலாக இரண்டு உப செயலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது நுவரெலியா மாவட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும்
அநீதியாகும்.
எனவே, தான் எமக்கு பிரதேச செயலகங்களே வேண்டும் என வலியுறுத்தும் கையெழுத்து
இயக்கத்தை நாம் ஆரம்பித்துள்ளோம் இந்த கையெழுத்து போராட்ட நடவடிக்கைக்கு வடக்கு மக்களின் ஆதரவினை கோரியே வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய கையெழுத்து பெறும் நிகழ்வில் கிளிநொச்சியிலும் மேற்கொண்டுள்ளளோம்.”
எனத் தெரிவித்த அவர் முதன் முதலாக முல்லைத்தீவு மாவட்ட மக்கள் இந்த விடயத்திற்கு ஆதரவாக தங்களது கையெழுத்துக்களை சமர்பித்துள்ளனர் எனவும்
தெரிவித்தார்.