ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் மின்சார பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுகிறது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் மின்சக்தி அமைச்சர், எரிசக்தி அமைச்சர், கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் மின்சார சபை சேவையாளர்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர், ஜனாதிபதியுடன் இடம்பெறும் சந்திப்பின் போது உலை எண்ணெய் இருப்பு மற்றும் எத்தனை நாட்களுக்கு போதுமானது என்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் மின்தடை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பில் சகல தரப்பினரின் கருத்துகளும் ஆராயப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மின்சார சபை முன்வைத்துள்ள மின் துண்டிப்பு யோசனை தொடர்பில் ஆராய்வதற்காக பொதுமக்கள் பயன்பாடுகள் ஆணைக்குழு தற்சமயம் கூடியுள்ளது.
இன்று (24) பிற்பகல் இது குறித்த தீர்மானத்தை வெளியிடவுள்ளதாக பொதுமக்கள் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது நிலவும் வரட்சியான கால நிலையில் நீர் மின் உற்பத்தி நிலையங்களில் நீர் மின் உற்பத்தியானது 20 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.