மண்வாசனை

தூரக்கனவுகளும் துயரநினைவுகளும் -4 பிரபா அன்பு!!

pain

போராட்டங்கள் நிறைந்த இந்த குறுகிய வாழ்க்கையில் தினந்தோறும் நாம் பலவிதமான மனிதர்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறோம்.

பலரிடம் கற்றுக்கொள்கிறோம்.சிலரிடம் தெளிந்து கொள்கிறோம்.அதேபோல் சிலரினால் ஏற்படும் மனக்காயங்களும் ஏமாற்றங்களும் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத வலிகளாகவே அமைந்துவிடுகிறது.

பல சந்தர்ப்பங்களில் மற்றையவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் இவ்வாறானவர்களிற்கு சரியான பதிலடியைக் கொடுக்க முடியாமல் இருக்கின்றதே என்ற ஆதங்கம்தான் மேலோங்கியிருக்கும்.

கண்ணிருந்தும் குருடர்கள்போல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே இன்று உண்மையாகிறது.

யுத்தத்திற்குப் பிற்பட்ட காலப் பகுதியில் பல மறக்க முடியாத சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும் இன்றும் என்றும் என்னால் மறக்க முடியாத ஒரு சம்பவத்தினை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நான் புனர்வாழ்வில் இருந்தபோது என்னோடு புனர்வாழ்வு பெற்ற தோழி மதி, எனக்கு அவசரமாக ஒரு நாள் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியிருந்தாள்.

அவளும் நானும் எப்போதும் பகிடிக்கதைகள்தான் கதைப்பது வழக்கம். அதேபோல ஏதோ ஒரு பகிடி சம்பவத்தை கூறத்தான் எடுக்கிறாள் என்று நினைத்தேன்.

நானும் வேலையாக இருந்தபடியால் ஆறுதலாக கதைப்போம் என்று நினைத்து பேசாது இருந்துவிட்டேன்.

மதி தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டிருந்தபடியால் அவளோடு கதைத்தேன்.யாராவது எங்கட பிள்ளைகள் கணவன் இல்லாது தனித்து பிள்ளைகளோடு கஸ்ரப்படுறவங்கள் இருந்தால் கூறும்படி கேட்டுக்கொண்டாள்.

அதிகமாக எங்கள் பிள்ளைகள் பலரின் கணவன்மார் யுத்தத்தில் இறந்தும் காணாமல் போயுமே இருந்தார்கள்.

மற்றையவர்களின் திருமண விடயத்தில் தலையிடுவது எனக்கு விருப்பமில்லாத ஒன்றாகவே இருந்தது.

எங்கட பிள்ளைகள் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்கவேணும் என்றுதான் நினைப்போம்.ஆனால் நாம் பார்த்து திருமணம் செய்து வைக்கும்போது ஏதாவது தவறாக நடந்துவிட்டால் அது எமக்கும்தான் மனதில் பாதிப்பாக இருக்கும்.

என்னால்தானே இவர்களிற்கு இவ்வாறு நடந்தது என்று தீராத மனகாயமாக போய்விடும் என்று நினைத்தேன்.

ஏற்கனவே யுத்தத்தில் கணவனை இழந்தும் தொலைத்தும் இருப்பவர்களிற்கு நாம் மீண்டும் மனக்காயங்களை ஏற்படுத்தக்கூடாது

“பனையால விழுந்தவனை மாடேறி மிதித்த  கதையாகப் போகக்கூடாது  யாரையும் இச்சூழலில் நம்ப முடியாது என்பதையும் மதியிடம் கூறினேன்.

இதில் அப்படி எதுவும் நடக்காது இந்த அண்ணா சுவிசில் இருக்கிறார்.தனது மச்சாளின் வீட்டின் அருகில் இருப்பவர். நல்லவர் என்றுதான் தனது மச்சாள் திருமண விடயம் கூறியதாகவும் சொன்னாள்.

அவளின் மச்சாளும் போராளியாக இருந்தவர். இறுதி யுத்தத்தின் பிற்பாடே சுவிஸ் நாட்டிற்குச் சென்றிருந்தார் மதியின் அக்காவும் என்னோடு கதைத்தார்.

‘கணவன் இல்லாது இன்றைய சூழலில் ஒரு பெண்ணால் தனித்து வாழ முடியாது.பொருளாதார பிரச்சனைகளை சமாளிக்கமாட்டார்கள்.

பணம் பொருள் எதுவும் வேண்டாம் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பிள்ளையை திருமணம் செய்வதுதான் அவரின் ஆசை என்றும் கூறியதோடு தனித்து இருக்கும் பிள்ளைகள் யாராவது இருந்தால் சொல்லுங்கோ’ என்றும் கூறினா மதியின் அக்கா.

கணவன் இல்லாது பலர் இருக்கினம் சரி…. நன்றாக விபரத்தை கேட்டு அவர்களுக்கும் சம்மதம் என்றால் தருகிறேன் என்று கூறினேன்.

நானும் தேடிப் பார்த்ததில் எனது நட்பான மதுவந்தி அக்காவிற்கு ஒரு மகள் இருந்தாள் சிறுமியாக…மதுவந்தி அக்காவின் கணவர் போராளியாக இருந்து இறுதி யுத்தத்தில் காணாமல் போய்விட்டார்.

மது அக்காவிற்கும் யுத்தத்தில் ஒரு கால் இல்லை. கணவனும் இல்லாது காலும் இல்லாது இன்றைய சூழலில் வாழ்க்கையைக் கொண்டு செல்வது பெரும் சிரமமான ஒன்று.

மது அக்காவிடம் போய் இவ்விடயத்தை கூறினேன்.’இப்படி ஒரு திருமணம் வந்திருக்கு உங்களிற்கு சம்மதமா?’ என்று கேட்டேன்.அவர் உடனும் மறுத்துவிட்டார்.
‘ இல்லை எனக்கு மகள் இருக்கிறா நான் பிள்ளையை நன்றாக வளர்த்தெடுக்க வேணும்.. எனக்கு மறுமணம் செய்யும் எண்ணம் இல்லை; என்றும் கூறிவிட்டார்.

அதன் பிற்பாடு சில நாட்களாக அவரோடு நான் மட்டுமல்ல எனது தோழி மதி, அவளது அக்கா, அவர்களின் மச்சாள் என்று பலரும் கதைத்து அவரின் சம்மதத்தை வாங்கினோம்.

‘உங்களிற்காக இல்லாது விட்டாலும் உங்கள் பிள்ளைக்காகவாவது நல்லதொரு எதிர்காலம் அமையும்’ என்று கூறியதில் மது அக்கா சம்மதம் தெரிவித்தார்.

அதன் பின்னர் எனது தோழி, அவரின் அக்கா என்று  ஏழு பேரளவில் மது அக்கா வீட்டிற்குச் சென்று வந்தோம்.சுவிசில் இருந்து மாப்பிளை அனுப்பியதாக ஒரு தொகைப் பணத்தினையும் மதியின் அக்கா, மது அக்காவிற்கு வழங்கியிருந்தார்.

அதன் பின்பு திருமணம் பேசிய நபரோடு மது அக்கா தொலைபேசியில் உரையாடி வந்தார்.

மது அக்காவின் கணவர் காணாமல் போயிருந்தபோதும் மரண சான்றிதழ் பெற்றுக்கொண்டார்.அத்தோடு மது அக்காவிற்கு பெண் தலைமைத்துவக் குடும்பம் என்று வீட்டுத் திட்டமும் வந்திருந்தது

அதனையும் வருங்கால கணவனாக வர இருந்தவர், இன்னும் கொஞ்ச நாட்களில் சுவிசிற்கு வந்து விடுவீர்கள்தானே இன்னுமொரு ஏழைக் குடும்பத்திற்கு போகட்டும் உதவி திட்டம். வீட்டினை வேண்டாம் என்று பிரதேச செயலகம் ஊடாக கடிதத்தினைக் கொடுக்கும் படியும் கூறிவிட்டார்.

வீட்டுத்திட்ட விடயத்தினை மது அக்கா கூறியபோது எனக்கு உடன் பாடில்லாமலே இருந்தது. ‘எதற்கும் அவசரப்படாது நீங்கள் வீட்டினை வேண்டாம் என்று கூறாது விடுங்கோ’ என்றும் கூறினேன்.

ஆனால் மது அக்காவும் தான் சுவிஸ் சென்று விடுவேன்தானே. இன்னுமொரு பெண் தலைமைத்துவக் குடும்பம் யாராவது பயன்பெறட்டும் என்று வீட்டுத் திட்டத்தினை வேண்டாம் என்றுகூறி கடிதமும் கொடுத்துவிட்டார்.

அதன் பிறகு சில நாட்களில் சுவிஸ் நபர் தொலைபேசி அழைப்புக்கள் மேற்கொள்வதை குறைத்துவிட்டார்.

மது அக்கா இதனை என்னிடம் கூறியபோது நான் எனது தோழி மதியிடம் இதனைக் கூறினேன்.அவர்களின் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்தவர் கூறிய காரணம்

“கால் ஒன்று இல்லாத நபரை விமானநிலையம் ஊடாக வெளிநாட்டிற்கு கூட்டிச் செல்ல முடியாது” என்பதே.

எனது தோழிகள் இருவர் இரண்டு கால்களும் இல்லாத நிலையில் சுவிசிலும் பிரான்சிலும் வாழ்கிறார்கள். ஒரு கால் இல்லாமல் எனது தோழிகளே பலர் வாழ்கிறார்கள்.

இரண்டு கால்களும் இல்லாதவர்களே போகும்போது ஒரு கால் இல்லாதவர் போகமுடியாதா? பலரை உதாரணம் கூறி நானும் தோழியும் அவரின் அக்காவும் கதைத்தபோதும் எதிர் முனையில் இருந்து கதைத்தவரின் பதில் மறுப்பாகவே வந்தது

மது அக்காவை அவர் வெளிநாட்டிற்கு எடுக்கும் எண்ணம் இல்லாதுள்ளார் என்பதும் விளங்கியது.தனது பொழுது போக்கிற்காகவே ஒரு இயலாத நிலையில் இருந்த பெண்ணின் வாழ்க்கையில் நுளைந்தார் என்றும் புரிந்தது.

எனது தோழியின் மச்சாள்தான் இந்த திருமணத்திற்கு பெண் கேட்டிருந்தவர்.

அவரிடம் தொடர்புகொண்டு இவ் விடயத்தினைக் கூறியபோது ‘அவர் கேட்டபடியால்தான் நான் திருமணம் பேசியது. இப்ப ஏன் மாட்டன் என்று நிற்கிறார் என்று தெரியேல’ என்றும் கூறினா.

இடையில் நின்ற என்னாலும் எனது தோழி, அவரின் அக்கா, திருமணம் கேட்ட தோழியின் மச்சாள் என்று இதற்கு யாராலும் தீர்வு காணமுடியாமல் போனது.

மறுமணத்திற்கு மறுப்பு தெரிவித்த மதுவந்தி அக்காவிற்கு திருமணம் செய்யும்படி கூறியது நாம்தான்.வெளிநாடு போனால் மகளாவது நன்றாக வாழ்வார் என்றே நாமும் ஆசைப்பட்டோம்.

யாராக இருந்தாலும் எங்களால் நன்றாக வாழ்ந்தால் எமக்கும் ஒரு மன சந்தோசம்தானே அவ்வாறுதான் நாமும் நினைத்துக்கொண்டது.

மது அக்காவைக்கொண்டு கணவனிற்கும் மரண சான்றிதழையும் எடுக்க வைத்து வந்த வீட்டுத் திட்டத்தினையும் வேண்டாம் என்று கூறவைத்ததும் இல்லாது கணவனின் உறவுகளிற்கும் ‘மறுமணம் செய்யப் போகிறேன்’ என்று தெரிவிக்கப்பண்ணி ஒரு ஏமாற்று நாடகத்தை ஆடிய கேவலமான மனிதனாக இருந்தான் அந்த ஏமாற்றுக்காறன்.

எமக்காக தனது கணவனை இழந்ததோடு மட்டுமல்லாது ஒற்றைக் காலினையும் இழந்து தனித்துவாழும் ஒரு முன்னாள் பெண் போராளியின் வாழ்க்கையில் மாறாத காயத்தையும் ஏற்படுத்திப் போனது இச்சம்பவம்.

மனிதர்கள் என்றால் இப்படித்தான் சிலர் இருப்பார்கள் என்பதையும்  அறிந்துகொண்டோம்.

நல்லவர்களோடும் தியாக மனப்பான்மை உடையவர்களோடும் வாழ்ந்த எமக்கு நம்ப வைத்து கழுத்தறுக்கும் கபட நாடகக்காறர்களும் இருக்கிறார்கள் என்பதை இச் சந்தர்ப்பத்தில்தான் அறிய முடிந்தது.

சிலரால் ஏற்படும் துயரங்களிற்கும் குற்றங்களிற்கும் எம்மால் தண்டனை வழங்க முடியாது.காலத்தின் போக்கில்தான் விடமுடியும்.

நிலையில்லாத இவ்வுலகில் யாரோ அனுபவிப்பதற்காக அடாத்தான வழியில் பணத்தினைச் சேர்த்து பாவம் தேடுவோரும் மற்றவரை ஏமாற்றி சுகங்களை அனுபவிப்போரும் வாழும் பூமியிது.

யுத்தம் முடிவுற்றதன் பிற்பாடு நூற்றுக்கு ஐம்பது வீதமான மக்கள் புலம்பெயர் சொந்தங்களால்தான் தமது வாழ்க்கையை நிலைப்படுத்திக்கொண்டார்கள்.

அதேபோல் அந்தரித்து நின்றோரிற்கு உதவிக்கரம் நீட்டியோர் சிறு தொகைப் பணத்திற்காகவே சில குடும்பங்களிற்கு கொடுத்த மனக்காயங்களும் சில செயற்பாடுகளும் வெளியில் கூறிட முடியாதவை.

உண்மையில் இன்று மதுவந்தி அக்கா கணவனும் இல்லாது வீட்டுத் திட்டமும் இல்லாது பெண் பிள்ளையோடு தனது வயதான தாயாரின் வீட்டில்தான் வசிக்கிறார்.

அவரின் முகம் பார்த்துக் கதைப்பதற்கு இப்போதெல்லாம் என்னால் முடிவதில்லை. நல்லது செய்வோம் என்று முயற்சித்து நானும் அவரின் மனக்கஸ்ரத்திற்கு காரணமாகிவிட்டேனே என்ற குற்ற உணர்வுதான் எனக்குள்ளது.

எப்போதும் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.மதுவந்தி அக்கா தனக்காக கணவனையும் , தனது காலினையும் இழக்கவில்லை.

நமக்காகவே அவர் இவ்வளவு துயரங்களையும் சுமந்தார். சுமந்துகொண்டுமிருக்கிறார்.இவ்வாறானவர்களிற்கு உதவி செய்யாதுவிட்டாலும் உபத்திரமாவது மற்றவர்கள் கொடுக்காமல் இருந்தால் போதும்.

அவர்கள் உண்ணாமல் இருந்தாலும் சரி…. இருப்பதற்கு சரியான வீடில்லாது வாழ்ந்தலும் சரி… அவர்கள் தமது வாழ்க்கையை நகர்த்திச் செல்வார்கள்.

இன்னொருவரை ஏமாற்ற முயலும்போது சற்றுச் சிந்திக்க வேண்டும் இதுவே நமது குடும்பத்தில் ஒருவருக்கு நடந்தால் எமது மனம் எவ்வளவு வேதனைப்படும், நாம் இதனை தாங்கிக்கொள்ளுவோமா என்று.

பொதுவாழ்க்கை என்று சென்றவர்கள் பலரின் வாழ்க்கை நிலை இன்று கண்ணீரும் சோறுமாகவேதான் பல இடங்களில் உள்ளது.

பணம் பதவி உள்ளது என்பதற்காக இல்லாதோரை இருப்பவர்கள் அடிமைப்படுத்தக்கூடாது என்று சிந்திக்க வேண்டும்.ஒரு காலத்தில் மரியாதையோடு பலரிற்கு எடுத்துக்காட்டாக  வாழ்ந்தவர்கள் இன்று யுத்தத்தின் பின்பு சுமக்கும் துயரங்கள் சொல்லித்தீராதவை.

“முடிந்தவரை உதவிக்கரம் கொடுப்போம் ஏமாற்றுவதை தவிர்ப்போம்”

இவர்களும் சாதாரண மனிதப் பிறவிகள்தான் இவர்களுக்கும் நோ இருக்கும், வலி இருக்கும் ,அன்பு,ஆசை,காதல்,நேசம்,பாசஉணர்வுகள் என்று அனைத்தும் உள்ளது என்பதை புரிந்து நடக்க முயற்சி செய்வோம்.

Related Articles

Leave a Reply

Back to top button