அரசியல் களத்தில் புதிய அரசியல் அணியொன்று எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அரசியல் அணியில் மையப்புள்ளியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநயக்க குமாரதுங்க இருக்கவுள்ளதோடு, குமார் வெல்கம, அர்ஜுண ரணதுங்க, சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் ஒருங்கிணையவுள்ளனர்.
இந்த அணியானது குமார வெல்கம தலைமையில் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய அரசியல் கட்சியான புதிய லங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்தி பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைக்கும் வகையில் செயற்படவுள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில்,
“எமது கட்சியின் தலைமைக் காரியாலயத்தை எதிர்வரும் மார்ச் மாதம் ஐந்தாம் திகதி பத்தரமுல்லையில் திறப்பதற்கு தீர்மானித்துள்ளோம். குறித்த நிகழ்வில் எமது கட்சியை மையப்படுத்திய பரந்து பட்ட அணியொன்றை ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.
ஜனநாயகம், மனிதாபிமான பண்புகள் நிறைந்த அரசியல் கலாசாரமொன்றையும் அனைவரும் சமத்துவமாக வழும் அமைதியான சூழல் ஒன்றையும் கட்டியெழுப்புவதற்கு சமூகத்தை வழிநடத்தக்கூடிய அரசியல் கட்சியொன்று அவசியமாகின்றது.
அந்த வெற்றிடத்தைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துக்காகவே இந்தப் புதிய அரசியல் கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்குத் தீர்மானித்துள்ளோம். இந்தக் கட்சியின் போசகராகவும் எம்மை வழிநடத்துபவராகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க செயற்படவுள்ளார். அத்துடன் அவருடைய வழிகாட்டலில் மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கி நகரவுள்ளோம்.
இந்த நிகழ்வுக்கு அனைத்துத் தலைவர்களையும் அழைப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்.
மேலும், எமது கொள்கைகளையும், இலக்குகளையும் ஏற்றுக்கொள்பவர்கள் எம்முடன் இணைந்து பயணிப்பதற்கு முடியும். அவ்விதமானவர்களுக்காக எமது கதவுகள் திறந்தே இருக்கும்.
அண்மையில் சுசில் பிரேமஜயந்தவுடனும் பேச்சுகளை மேற்கொண்டுள்ளேன். அதேநேரம், ஏனைய தலைவர்களையும் இணைத்துக்கொண்டு பயணிப்பதில் எமக்குத் தயக்கங்கள் இல்லை.
மைத்திரிபால சிறிசேன, அரசின் பங்காளியாக இருக்கின்றார். அவர் அதிலிருந்து வெளியேறி எம்முடன் இணைந்து கொள்வது பற்றி தீர்மானித்தால் பேச்சுக்களை முன்னெடுப்பதற்குத் தயாராகவே உள்ளோம். ஏனைய எதிரணிகளையும் இணைத்துப் பயணிப்பதற்கும் தயாரகவே உள்ளோம்” – என்றார்.
செய்தியாளர் – சுடர்