திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தை மாதம் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி பெரியசூரியூரில் இன்று(15) ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இதற்காக மொத்தம் 600 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர்.
போட்டியில் பங்கேற்ற வீரர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தனித்தனி வண்ண ஆடைகளும் வழங்கப்பட்டது. ஒரு குழுவினர் குறைந்தபட்சம் 4 மணி நேரம் மாடு பிடிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். காலை 8 மணிக்கு போட்டிகள் தொடங்கின. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தொடங்கி வைத்தார்.
வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் திமில்களை பிடித்து அடக்கினர். ஒருசில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் களத்தில் நின்று விளையாடியன.
இதன்போது எதிர்பாராத விதமாக அந்த காளை உரிமையாளர் (வயது 29) ஒருவரை மார்பில் முட்டியது.
பின்னர் சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள அரச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அதிக இரத்தம் சென்றதால் பரிதாபமாக இறந்தார்.
அவனியாபுரத்தில் நேற்று காலை 7.45 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
இதில் மாடுபிடி வீரர்கள் 38 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 24 பேர், பார்வையாளர்கள் 18 பேர் என மொத்தம் 80 பேர் காயம் அடைந்தனர்.
இதன்போது போட்டியை வேடிக்கை பார்த்த இளைஞர்(வயது 18) ஒருவர் மாடு முட்டி பலியானார்.
காயம் அடைந்தவர்களில் 21 பேர் மதுரை வைத்தியசாலையிலும், ஏனையவர்கள் அவனியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.