கவிதைமுத்தமிழ் அரங்கம்.

மரண வலி – கோபிகை!!

poem - kobikai

நீ கொப்பளித்த
விசக்காற்று
இன்னும் என்னை
வதம் செய்தபடிதான்…

நகத்தைப் பிடுங்கிவிட்டு
அதை கோரமாய் ரசித்திருக்கிறாய்…
உயிரைத் திருகிவிட்டு – நீ
ஊஞ்சல் ஆடியிருக்கிறாய்..

என் கெஞ்சல்களையும்
என் கண்ணீரையும்
கேலி செய்து
மகிழ்ந்திருக்கிறாய்.. ….

சாலையோரத்து சேற்றைப் போல
என்னை மிதித்துவிட்டு
என் மீதே
காலைப்புரட்டி நடந்திருக்கிறாய்…

வார்த்தைகளால் கொல்லும் வித்தையை
எப்படிக் கற்றுக் கொண்டாய்..
உடனிருந்து உயிர்குடிக்கும்
ஒரு வகை பாம்பினமோ நீ..

கிலி பிடித்த என்னை
பைத்தியம் என்கிறாய்…
அன்றாடம் அதை அழைத்தே
என் பெயரை மறக்கச் செய்கிறாய்..

முழந்தாழிட்ட என் வேண்டுதலுக்கு
கூந்தல் பற்றி உயர்த்தி
கூக்குரலிடுகிறாயே
இது என்ன நியாயம்…

உன் வரை நான்
வெறும் அற்ப பதர் ….
பெண்ணின் பொறுமை என்பது
எதுவரை…நீசனே…

வாள் சுழற்ற வேண்டுமா..
வாய் வீரன் உன்னிடம்…
காயங்களைக் கொடுத்தவன்- நீ
கலங்கித்துடித்து அனுபவித்தவள் -நான்..

புரையோடிக்கிடந்த என் நினைவுகள்
விழித்துக் கொண்டது…
போர் என்பது
புளுவோடு செய்வதல்ல…

பூக்களைத் தரநினைத்த என்னிடம்
கத்தியை வீசுகிறாய்..
தடுக்கும் லாவகம் தெரியாவிட்டாலும்
அகன்றுவிடும் வித்தை அறிந்தவள் நான்..

என்னையும் உன்னையும்
சுற்றிக்கொண்ட காலக்கண்ணாடி
தெறித்து உடைகிறது
கோர முகங்களுடன்…

யூதாசின் பாவங்கள்
மன்னிக்கப்படுவதே இல்லை..
உன்னதமான ஒரு தியாகம்
உடைந்து அழுகிறது அங்கே….

Related Articles

Leave a Reply

Back to top button