இலங்கைசெய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் போராளி ஆதவன் படுகொலையா- நீதிமன்றில் மனுத்தாக்கல்!!

aathavan death

யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் மர்மமான முறையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் போராளியான மாணிக்கம் ஜெயக்குமாரின் (ஆதவன்) மரணத்தில் சந்தேகம் இருக்கின்றது என மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் விண்ணப்பம் ஒன்று செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாயைச் சேர்ந்த, இரு பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 2021.09.28 ஆம் திகதி காலை 6 மணியளவில், வழமைபோல் நடைப்பயிற்சிக்குச் செல்வதாகக்கூறி வெளியே சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

பின்னர் 2021.09.30ஆம் திகதி மாலை குறித்த நபர் நவாலிப் பகுதியிலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டார்.

இவரது மரணத்தில் சந்தேகம் இருக்கின்றது எனவும், இவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அப்போதே நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவருடைய நண்பர்கள் தெரிவித்திருந்த போதிலும், குடும்பத்தினர் தமது பாதுகாப்புக் கருதி இது தொடர்பாக எந்தக் கருத்தும் வெளியிடவில்லை.

இருப்பினும், இவருடைய வீட்டுக்கும் இவர் சடலமாக மீட்கப்பட்ட பகுதிக்கும் இடையில் நெடும் தூரம் காணப்பட்டதையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனால் இவருடைய உடல் நீதிமன்றக் கட்டளையின்படி உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் தகனம் செய்யப்படாமல் புதைக்கப்பட்டது.

விசாரணைகள் இடம்பெற்று குறித்த வழக்கு எதிர்வரும் 10ஆம் திகதி நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படத் திகதியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார் எனவும், அதனால் இவர் தனது உயிரை மாய்த்திருக்கலாம் எனவும் பல செய்திகள் பரப்பப்பட்டிருத்ததைத் தற்போது அறிந்த குடும்பத்தினர் அதை முற்றிலும் மறுத்துள்ளனர்.

அவர் நல்ல சுகதேகியாக இருந்தார் என்றும், தவறான முடிவு எடுக்கும் நிலையில் அவர் இருக்கவில்லை என்றும், அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கின்றது என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில், குறித்த மரணத்தில் சந்தேகம் இருக்கின்றது எனவும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி நேற்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு எதிர்வரும் 10ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளதால், அன்றைய தினம் இவ்விண்ணப்பம் தொடர்பான நடவடிக்கைக்காகத் தவணையிடப்பட்டுள்ளது.

உறவினர்கள் சார்பாக சட்டத்தரணி எம்.திருக்குமரன் மன்றில் விண்ணப்பம் செய்திருந்தார்.

மாணிக்கம் ஜெயக்குமார் (ஆதவன்) 1994ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்ததுடன், அரசியல்துறையின் நிதி தொடர்பான விடயங்களில் பொறுப்பாளராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் – சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button