“அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கியுள்ள எரிவாயு கொள்கலன்களை விடுவித்தமைக்குக் கடன் உறுதிப் பற்று பத்திரங்களை அரசு பெற்றுத் தருவதாக இருந்தால் மூன்று வார காலத்துக்குள் முழு நாட்டுக்கும் பாதுகாப்பான சமையல் எரிவாயு சிலிண்டர்களை எம்மால் விநியோகிக்க முடியும்.”
- இவ்வாறு லாப் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிடிய தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“லாப் ரக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சேகரிக்கப்பட்டு அதற்கு நீல நிறம் (லிட்ரோ ரக சமையல் எரிவாயுவின் நிறம்) பூசப்படும் செயற்பாடுகள் ஒரு சில பகுதிகளில் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடு குறித்து பொலிஸ்மா அதிபரரிடம் முறைப்பாடு அளித்துள்ளோம்.
நிற மாற்றம் குறித்து உரிய நடவடிக்கை முன்னெடுக்குமாறு லிட்ரோ நிறுவனத் தலைவரிடம் அறிவுறுத்தியுள்ள நிலையிலும் அது குறித்து அவர் கவனத்தில்கொள்ளவில்லை.
எரிவாயு கொள்வனவின்போது பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்வதால் உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிக்கும்போது விலைச்சூத்திரத்துக்கமைய தேசிய மட்டத்தில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் எனக் கடந்த மார்ச் மாதத்திலிருந்து நுகர்வோர் அதிகார சபையிடம் வலியுறுத்தி வருகின்றோம். இருப்பினும் அதற்கு இதுவரையில் அனுமதி கிடைக்கப் பெறவில்லை” – என்றார்.
செய்தியாளர் – சுடர்