எதிர்காலத்தில் பாகிஸ்தானை சுனாமி தாக்கும் அபாயம் காணப்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை நடத்திய நிகழ்வில் கலந்து கொண்ட போது பாகிஸ்தானின் வளிமண்டலவியல் திணைக்களம் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் அதிகளவில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதியில் பாகிஸ்தான் அமைந்துள்ளது. கடந்த 2008 – 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அங்கு 4,039 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், பாகிஸ்தானில் சுனாமி, புயல் மற்றும் கனமழை போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1945 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் கடலோரம் மற்றும் ஈரான், இந்தியா மற்றும் ஓமான் நாடுகளை சுனாமி தாக்கியதில் 4,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அத்துடன், பாகிஸ்தானில் சுனாமி ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும், அதனால் குவாடர் துறைமுகம் மற்றும் அந்நகரம் நீரில் மூழ்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கராச்சி நகரில் ஒன்று முதல் இரண்டு கிலோமீற்றர் வரையான கடலோர பகுதிகள் பாதிப்படைவதற்கான வாய்ப்புகள் உள்ளதுடன், சிந்து கடலோர பகுதியும் சுனாமியால் பாதிப்படையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.