இலங்கைசெய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களை விடுதலை செய்க – சபையில் ரிஷாத் எம்.பி. வேண்டுகோள்!!

Rishad MP

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, சிறையில் வாடும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்களை விடுதலை செய்ய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.

நேற்று நாடாளுமன்ற குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:-

“பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் அநியாயமாக சிறைகளில் வாடுகின்றனர். கடந்த காலத்தில் போரில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்களில் சுமார் 12 ஆயிரம் பேர் போர் முடிவின் பின்னர், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால், அதைவிட சிற்சில காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டவர்கள், இன்னும் குற்றப்பத்திரிகைகள் கூட தாக்கல் செய்யப்படாமல் தசாப்தகாலமாக சிறையில் வாடுகின்றனர். அவர்களின் விடுதலையிலும் கவனம் எடுக்குமாறு நீதி அமைச்சரிடம் வேண்டுகின்றேன்.

அமைச்சர் நாமல் ராஜபக்சகூட அண்மையில் பேசும்போது, “இந்த விடயத்தைக் கட்டம்கட்டமாக முன்னெடுப்போம்” என உறுதியளித்தார். நான் சிறையில் இருக்கும்போது என்னிடம் வந்து அவர்கள் வேதனைப்பட்டனர். அவர்களின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பல வழக்குகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலும் அல்லது விசாரணையின்றியும் இருக்கின்றன. சிங்கள இளைஞர்கள் கூட இந்தச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் காலத்தைக் கடத்துகின்றனர்.

தமிழ் இளைஞர்கள் பலரின் எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறியிருக்கின்றது. கடந்த இரண்டு வருட காலத்துக்குள் சுமார் 40 அல்லது 50 இளைஞர்கள், ‘புலிகளின் மீளெழுச்சியில் தொடர்புபட்டார்கள்’ எனக் கைதுசெய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

20, 22 வயது நிரம்பிய இந்த இளைஞர்களுக்கு விடுதலைப்புலிகள் தொடர்பில் பெரிதாக தெரிந்திருப்பது நியாமில்லை. ஏனெனில், 2009 இல் போர் முடிந்தபோது, அவர்கள் சுமார் 10 வயது நிரம்பியோர்களாகவே இருந்திருப்பர். வட்ஸ்அப்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வருகின்ற செய்திகளைப் பரிமாறியதற்காகவே அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்த இவர்களுக்கு வழக்காடுவதற்குக் கூட வழி இல்லை. எனவே, அவர்களின் விடுதலையிலும் சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – என்றார்.

செய்தியாளர் – சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button