இலங்கைசெய்திகள்

வவுனியாவில் குளங்களை ஆக்கிரமித்த 6 பேரை உடனடியாக வெளியேற்ற நீதிமன்று உத்தரவு!!

வவுனியா பண்டாரிக்குளத்தின் அலைகரை பகுதியினை அத்துமீறி ஆக்கிரமித்த 6 பேர் உடனடியாக அவ்விடத்தினை விட்டு வெளியேற வேண்டும் என்று வவுனியா நீதிமன்று தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளதாக வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எஸ்.விஸ்ணுதாசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவரால் இன்று முன்னெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வவுனியா மாவட்டத்தில் குளங்களிற்கு சொந்தமான காணிகளை அடாத்தாக பிடித்தல் மற்றும் வயற்காணிகளை அடாத்தாக பிடித்து மண்நிரவி வீடுகள் அமைக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வந்துள்ளது.

இது தொடர்பாக வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளரால் 2020 ஆம் ஆண்டளவில் வவுனியா பண்டாரிக்குளத்தின் அலைகரை பகுதியில் குளத்திற்கு சொந்தமான காணியினை அத்துமீறி பிடித்தமை தொடர்பாக 32 வழக்குகள் தொடரப்பட்டது.

இதனடிப்படையில் அந்த வழக்குகளில் 6 வழக்குகளிற்கான தீர்ப்பு நீதிமன்றால் நேற்று (08) வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் குறித்த 6 நபர்களும் அந்த இடத்தினை விட்டு வெளியேற வேண்டும் என்று

நீதிமன்றால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த விடயத்தினை நாம் தெரியப்படுத்துகின்றோம்.

ஏனெனில் குளக்காணிகளை அத்துமீறி பிடிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. இப்படியான தீர்ப்புக்கள் எதிர்காலத்தில் இவ்வாறான அத்துமீறல்களை குறைப்பதற்கான ஆரம்பகட்டமாக இருக்கும் என நாம் பார்கின்றோம். குளங்களையும், வயல்களையும் பாதுகாக்க வேண்டியது எமது எதிர்கால நீண்டகால தேவை. இதற்காகவே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

எனவே எமது மாவட்டத்தில் குளங்களை அடாத்தாக பிடித்தவர்களிற்கு எதிராக தொடர்ந்தும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் காணிகளை கொள்வனவு செய்யும் போதும் வீடுகளை அமைக்கும்போதும் பொருத்தமான இடங்களை தெரிவு செய்வது நன்மை பயக்கும் என்பதே எனது வேண்டுகோள். எனவே பொதுமக்களின் ஒத்துழைப்பினையும் நாம் வேண்டி நிற்கின்றோம் என்றார்.

செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button