கட்டுரை

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா – சிறு அறிமுகம்!!

karththik neththa

நெற்றிக்கண் படத்தில் இடம்பெற்ற “இதுவும் கடந்துபோகும்….சுடரி…இருளில் ஏங்காதே….வெளிதான் கதவை மூடாதே….” என்ற பாடல் வரிகளின் வீச்சு அப்பாடலை எழுதியவர் யாரென்று தேடத்தூண்டியது. தேடலின் விடை…பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா….

வித்தியாசமான சிந்தனைகளுக்கும் கற்பனைகளுக்கும் ஆழ்ந்த அமைதி கொண்ட வரிகளுக்கும் சொந்தமானவராக இருந்த அவரைப்பற்றி மேலும் தேடியதில் அறிந்துகொண்ட விடயங்களை பகிர்ந்துகொள்ளவே இவ் அறிமுகம்.

கார்த்திக் நேத்தா இந்தியாவில் சேலம் மாவட்டத்தில் பிறந்தவர். ஆங்கில வழியில் படித்து ஆங்கிலம் பிடிக்காமல் தமிழைப் படிக்க வந்த தமிழன். பதின்ம வயதில் தமிழைக் காத்திரமாக வாசிக்க ஆரம்பித்து இப்போது திரைத்துறையில் இருப்பவர்.

‘சுருங்கச் சொல்ல வேண்டுமானால் மொழி வழியாக என்னையும் ஒட்டுமொத்த உலகத்தின் ஆத்மாவையும் தத்துவத்தையும் புரிந்துகொள்ள முயற்சி செய்கிற ஒரு மொழிஞன் ‘ என தன்னைப்பற்றி சுருங்கச் சொன்ன அறிமுகம் இது.

எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஏற்பட்ட காதல் தோல்வியில் முடிந்து அந்த காதலிலிருந்து தப்பிப்பதற்காக பாடல் கவிதைகள் என போய் பிறகு ஒரு கட்டத்தில் கண்ணதாசனின் கண்ணே கலைமானே பாடலில் பாதிக்கப்பட்டு திரைத்துறைக்குப் போக வேண்டுமென்று தன்னையும் அறியாமல் ஒரு முயற்சி செய்துதான் திரைத்துறைக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த ஒரு நேர்காணலின் சிறுதுளி உங்களுக்காக ….

வாசிப்பு பழக்கம் பற்றி கேட்டபோது…..
எனது தகப்பன் பயங்கரமான வாசகர். தீவிரமான இலக்கியமெல்லாம் அவர் அப்போதே படித்துக் கொண்டிருந்தார். தத்துவங்கள் எல்லாம் அவர் படித்து கொண்டிருந்தார். அவரிடமிருந்துதான் என் வாசிப்பு பழக்கம் தொடங்கியது. சிறு வயதிலேயே தத்துவங்கள் படிக்கத் தொடங்கினேன்.

சிறு வயதில் வாசித்த புத்தகம் விவேகானந்தரின் ஞான தீபம். பிறகு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே சித்தர் பாடல்கள் எல்லாம் வாசித்தேன். மனப்பாடமாக அந்த சமயத்தில் சொல்லவும் தெரியும்.

சிவவாக்கியாரின் பாடல் ஒன்றைப் பாடுகிறார்இ “என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே… என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின் என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ… என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டனே”

அடுத்து “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே”

  • இப்போது இவை தான் ஞாபகம் வருகிறது.

உங்கள் பாடல்களில் ஒரு துறவுநிலை உள்ளதே?
இந்த சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கிற தொடர்பு எனது பாடல்களில் பெரும்பாலும் இருக்காது. பொருள்வயமான தொடர்பு இருக்காது. என்னுடைய வாழ்க்கை முறையிலும் அது இருக்காது. ஒரு மெட்டீரியலிஸ்ட்டுக்கான எந்த கூறுகளும் என்னிடமும் இல்லை. எனது பாடல்களிலும் இல்லை. சின்ன வயதிலிருந்து சித்தர் பாடல்கள் ஆன்மிக புத்தகம் வாசித்தது ஒரு காரணம்.

அது மட்டுமல்ல இப்போது நான் ஊருக்குச் சென்றாலும் அதிக நேரம் நான் செலவிடும் இடம் மயானம்தான். அதன் அமைதி தனிமை… யோசிப்பதற்கு நேரம் தருகிறது. அதுதான் என் பாடல்கள் இவ்வாறாக இருப்பதற்குக் காரணம் என்று எண்ணுகிறேன். நிறையப் பிணங்களை அங்கே பார்த்து இருக்கிறேன். நிலையாமை குறித்து நிறைய யோசித்துக் கொண்டே இருக்கிறேன். அப்புறம் திருக்குறள். அதில் செல்வ நிலையாமை யாக்கை நிலையாமை என அனைத்து நிலையாமைகள் குறித்தும் அவர் பேசி இருக்கிறார். அதுதானே உண்மை. இந்த உண்மையிலிருந்து விலகி போலியான ஒரு வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது சிறு வயதிலேயே தெரிந்துவிட்டது. அந்த போலிகள் என் வாழ்க்கையிலும் இல்லை. என் வரிகளிலும் இல்லை.

அறிந்ததிலிருந்து விடுபட விரும்புவது ஏன்?
அறிந்ததெல்லாம் போலியாக இருக்கும் போது அதிலிருந்து விடுபடுவதுதானே நியாயம். உண்மையை உண்மையாக நாம் பார்ப்பதே இல்லை.உண்மையின் வேர் நாம் அறிந்தவற்றில் இல்லாத போது அதிலிருந்து விலகுவதுதான் சரி. அதனால்தான் அறிந்ததிலிருந்து விலக விரும்புகிறேன்.

நீங்கள் உண்மை என கருதுவது?
இப்போது நான் பேசிக் கொண்டிருக்கிறோம் தானே? அதுதான் உண்மை. நீங்கள் கேள்வி கேட்கும் போது எனது மனம் எந்த அகங்காரத்திற்குள்ளும் சிக்காமல்இ எந்த முன் முடிவுகளும் இல்லாமல் அணுகுகிறதுஇதானே? இதுதான் உண்மை என நினைக்கிறேன்.

தனிமையில் உதிக்கும் வரிகள் உலகியலோடு வேறுபட்டு நிற்கும் என்பதை கார்த்திக் நேத்தாவின் நேர்காணலின் மூலம் அறிந்துகொண்டமை மகிழ்ச்சி….மாறுபட்ட இக்கவிஞனின் புகழ் வளர வாழ்த்துவோம்….

கோபிகை

Related Articles

Leave a Reply

Back to top button