கட்டுரை

இலங்கை வாழ் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதில் சமயங்களின் வகிபங்கு!

article

(கட்டுரையாளர் – அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர்)

நல்லிணக்கம், சகவாழ்வு, சமாதானம் என்கிற இந்த மூன்று சொற்பிரயோகங்களும் நாடு சுதந்திரமடைந்த நாள் தொட்டு இன்றுவரையிலும் மக்களிடையே ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இந்த முயற்சியில் வெற்றி காண்பதில் தொடர்ந்து தோல்விகளையே நாம் சந்தித்து வருகின்றோம். இதனை வெற்றிகொள்வதில் காணப்படும் பகைப்புலன்களை சரியான முறையில் கண்டறிவதில் பின்னடைவையே காணக் கூடியதாக உள்ளது. நிலைபேறான தேசிய மற்றும் சமய நல்லிணக்கத்தை உருவாக்க பொருளாதார, சமூக, கலாசார, அரசியல் காரணிகளின் பங்களிப்பின் அவசியம் பற்றியும் நாம் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இலங்கை பல்லின மக்கள் வாழுகின்ற ஒருநாடு. சமூக, சமய மற்றும் மொழி ரீதியிலான வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும் நாடு என்கிற வகையில் அனைவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் தன்மைகொண்ட நல்லிணக்க ரீதியில் சுதந்திர போக்குடன் வாழ வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது. இன முரண்பாடுகள் தோற்றம் பெறுவதற்கும், சுதந்திரத்திற்குத் தடையாக அமைவதற்கும் கீழைத்தேய சமய வழிபாட்டு முறைகளும், மதரீதியான போக்குகளும் ஒரு வகையில் காரணமாகும்.

அரசியலில் தனது இருப்பினைத் தக்கவைத்துக் கொள்வதற்கு உபாயமாக தன்னுடைய சமயரீதியான கருத்துக்களைத் திணிப்பதன் ஊடாக வெறித்தனமான உணர்வை பிழையான வழிகளில் காண்பிக்க எத்தனிக்கின்றபோதுதான் முரண்பாடுகளும் பிற்போக்கான சிந்தனைகளும், மேலாதிக்கவாதங்களும் தோற்றம் பெறுகின்றன. அந்தவகையில் இலங்கையின் இன முரண்பாடுகளின் தோற்றத்தின் பின்புலத்தை ஆராய்ந்து பார்க்கின்றபோது 1918ஆம் ஆண்டு காலப்பகுதியில் கம்பளையில் ஏற்பட்ட முஸ்லிம் சிங்கள இன முரண்பாட்டின் தோற்றுவாய் மதரீதியில் புரிந்துகொள்ளப்படாத பிழையான அணுகுமுறைகளின் வெளிப்பாடே என்று கூறலாம்.

அதேபோன்று, தமிழ் சிங்கள மக்களிடையே ஏற்பட்டிருந்த முரண்பாடானது தனித்துவக்கொள்கைளும், பிரித்தாளும் தந்திர போக்குகளுமே இறுதியில் இனரீதியான குழுக்கள் தோற்றம் பெறவும்வழிவகுத்தது.

அரசும் அக்குழுக்களும் எதிர்வாதங்களைத் தோற்றுவித்து யுத்தமுனைக்குச் சென்ற வரலாற்றுப் பின்னணிகளையும் நாம் நோக்க வேண்டியிருக்கிறது. சுதந்திரத்திற்கு முன்னர் இலங்கையை ஆட்சிசெய்த ஆங்கிலேயர்களின் கல்வி, தொழில்வாய்ப்பு, சமய மேலாண்மை, சுரண்டும் தன்மை, மேலாதிக்கம் போன்ற இன்னோரன்ன விடயங்களால் ஒன்றுபட்டிருந்த மக்களை பிரித்தாளும் தன்மைக்கு இட்டுச்சென்றமை கண்கூடு. அதிலிருந்து விடுபடுவதற்கு இன்னும் முடியாமல் இனப் பிரச்சினைக்கு சரியான தீர்வினை கொண்டுவருவதில் ஆட்சிசெய்த அரசியல் தலைவர்களும்சரி, சமய குரவர்களளும் சரி ஜனநாயக ரீதியில் அரசியல் அமைப்பின் பிரகாரம் முழுமையாக வழங்கி உண்மையான இனக்குரோதத்தை முற்றாக அகற்றிட துணிவின்றியே இன்றுவரை இலங்கை காணப்படுகின்றது.

எனவேதான், எந்தவொரு தரப்பும் இதனை தனித்து நின்று சாதிக்க முடியாது. இலங்கையின் நிலைபேறான தன்மைக்காக தேசிய மற்றும் மத ஒற்றுமைக்காக கூட்டு அமைப்பாக சகல தரப்பும் ஒன்றிணைவதன் மூலம் தான் இந்த சமாதான சகவாழ்வு என்கிற பயணத்தில் சரியான திசையை நோக்கி முன்னகரக்கூடியதாக இருக்கும். நாட்டில் தேசிய மற்றும் சமய நல்லிணக்கத்தை ஏற்படும் வகையில் விஷேட பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் சகல கட்சிகளும் மனமொத்த அடிப்படையில் இணைய முன்வந்துள்ளன.

நாட்டின் சகல கட்சிகளும், சகல இனங்களும், சமயக் குழுக்களினதும் பங்குபற்றலுடன், தேசிய மற்றும் சமய நல்லிணக்கத்தினூடாக நிலைபேறானதொரு நிலைக்கு நாட்டை முன்னெடுத்தல் விடயத்தில் முழுநாடும் ஒன்றிணைவது மிக அவசியமான தொன்றாகும். பல்லின மக்கள் வாழும் இலங்கை போன்றதொரு நாட்டில் நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்புவதென்பது சிரமமானதொரு காரியமா என்ன? ஆயினும், ஒவ்வொரு தரப்பும் மற்றத் தரப்பினரின் மனங்களை வெல்லக்கூடிய வகையில் செயற்பட முடிந்தால் அந்தச் சிரமமானபணி சாதகமாகிடவும் முடியும். இதில் முக்கியபங்குவகிப்பது நம்பிக்கை என்கிற விடயமே. நம்பிக்கையும், விட்டுக்கொடுப்பும் தாராளமனப்பாங்கும் இந்த முயற்சியை வெற்றிகொள்ளச் செய்யும். இதற்கு மனமாற்றம் இன்றியமையாத தொன்றாகும்.

தேசிய மற்றும் சமாதான, சமய நல்லிணக்க நிலைபேற்றை உருவாக்குவதில் எந்தவொரு தரப்பாலும் தனித்து இயங்க முடியாது. பொருளாதார, சமூக, கல்வி கலாசார அரசியல் ரீதியிலான சகல பிரிவுகளதும் முழுமையான பங்களிப்பு மிக முக்கியமானதாகும் என்பதை எவரும் மறந்துவிட முடியாது. இந்த தேவைப்பாட்டினை ஒவ்வொரு தரப்பும் மனதில் கருதிச் செயற்பட முன்வர வேண்டும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், கட்சி வேறுபாடுகளும் இனமத முரண்பாடுகளும் இந்த விடயத்தில் முற்றாக களையப்படவேண்டும்.

வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என்ற வேறுபாடின்றியும் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற முரண்பாட்டின்றியும் சகலரும் இலங்கையர் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஒன்றுபட்டால் மட்டுமே இந்தப் பயணத்தில் சரியான திசையை நோக்கிப் பயணிக்க முடியும். நாட்டின் வளமான எதிர்காலம் இந்த ஒற்றுமையிலேயே தங்கியிருக்கின்றது. கடந்தகால கசப்புணர்வுகள் எமது உள்ளங்களிலிருந்து பிய்த்தெறியப்படவேண்டும். எண்ணங்கள் தூய்மையாக அமையும் பட்சத்திலேயே இந்த முயற்சி சாத்தியப்பட முடியும்.

நல்லிணக்கம், சமாதானம், ஒருமைப்பாடு என்பன வார்த்தைகளால் மட்டும் அடையக்கூடியவைல்ல. எமது செயற்பாடுகளிலேயே அது தங்கியுள்ளது. ஒவ்வொரு சமூகத்தினதும் அடிப்படை உரிமைகளை பேணுவதற்கும் வாய்ப்பளிப்பதற்கும் நல்லிணக்கம் ஒன்றே சரியான பாதையாகும். பொதுவான அடிப்படை உரிமைகள், தேவைப்பாடுகள் முறிவடைகின்றபோதே நல்லிணக்கம் இல்லாது போகின்றது. மற்றவர்களின் அன்பையும், தேசத்தையும் பெற்றுக்கொள்ளாத வரை நல்லிணக்கம் என்பது என்றும் கேள்விக்குறியானதாகவே இருக்கும். நல்லெண்ணத்தினூடே மனங்கள் வெல்லப்படுவதன் மூலமே இது சாத்தியப்பட முடியும்.

நாளைய எதிர்காலம் குறித்து ஒவ்வொருவரும் ஆழமாக சிந்திக்க வேண்டும். எமது எதிர்காலச் சந்ததியின் எதிர்பார்ப்புக்கள் வீணாகிவிடக் கூடாது. பிளவு, முரண்பாடுகளை அவர்களுக்கு விட்டுச் செல்ல முடியாது. நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலமே எதிர்காலம் வளமானதாக அமைய முடியும். நாட்டு மக்களனைவரும் நாளைய விடியலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கினறனர். இன, மத வாதங்கள்தான் இதற்குப் பெரும் தடை. இன மத மொழி பேதங்கள் முற்றாக களையப்படுவதன் மூலமே தேசிய ஒருமைப்பாட்டை உறுதி செய்ய முடியும். விட்டுக்கொடுப்போடும் நல்லிணக்கத்தோடும் கூட்டு முயற்சியாக முன்னெடுப்பதன் மூலமே இதனை வெற்றிகொள்ள முடியும்.

“எல்லா மதமும் சமமானது. என் மதத்தை போலவே, எல்லா மதங்களையும் மதிப்பேன். எதையும் குறைவாக நினைக்க மாட்டேன். மதங்கள் என்பது வழிபாட்டு முறைதான். மதங்கள் என்பது ஒரே உள்ளங்கையை நோக்கி நீளும் விரல்கள் போன்றவை. அ வை ஒரே உண்மையை நோக்கி அழைத்து செல்லும் வெவ்வேறு விரல்கள்” என்றார் கலீல் ஜிப்ரான். அதேபோல நம்மை மேன்மைப்படுத்துவதற்காகவே மதங்கள். அவை நாம் எப்படி வாழவேண்டும்? என்பதை நெறிப்படுத்தி நேர்மையுடன் திகழ வழிகாட்டுகின்றன. அவை வழிபாடுகளால் வேறுபட்டாலும், அன்பு என்கின்ற ஒற்றை புள்ளியில் இணைந்தால்தான் மானுடம் செழிக்கும், மனிதம் தழைக்கும்.

பல்லின சமூகத்தில் வாழ்கின்ற ஒரு மனிதன் சமூகத்தோடு முரண்பாடுகள் இன்றி இணக்கப்பாட்டோடு ஒற்றுமையாக வாழப்பழகிக் கொள்ளும் நிலையே சமூக நல்லிணக்கம் எனலாம். சமூக நல்லிணக்கம் எனும் எண்ணக்கருவானது இன்று உலக ஒழுங்கில் வலம்வருவது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இலங்கையில் வாழும் மக்கள் பல்லின சமூகத்தில் வாழ்கின்றவரகளாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் அவர்களுக்கிடையே இனப்பிரச்சினை மற்றும் முரண்பாடுகள் தலை தூக்கியுள்ளதனை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவ்வகையில் எமது நாட்டில் சகல பாகங்களிலும் சமூகநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு பௌத்த – முஸ்லிம், இந்து சமயரீதியான உறவுகளை மேம்படுத்தி ஒற்றுமை காணவேண்டியது அவசியமானதாகும்.

இவ்வாறு புராதன காலத்திலிருந்து முரண்படுகள் மற்றும் நல்லுறவுகள் ஏற்பட்டுவருகின்றது. இத்தகைய முரண்பாடுகள் மற்றும் நல்லுறவுகள் ஏற்படாவிடின் மனிதன் மனிதனாகவே வாழ்ந்திருக்க முடியாது. இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் பல கலாசார பண்பாடுகளுக்கு மத்தியில் வாழ்கின்ற அதேவேளை பௌத்த இன மக்கள் மத்தியில் சிறுபான்மை இனமாக வாழ்கின்ற சூழலில் பௌத்த – முஸ்லிம் உறவு நிலைகள் பற்றிய விடயங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இவ்வாறான உறவு நிலைகள் சமூகத்தின் மத்தியில் பல்வேறு சாதக, பாதகவிளைவுகளை ஏற்படுத்தி விடுவதனைக் காணலாம். இதற்கு பல்வேறு குழுக்களும் இயக்கங்களும், ஊடகங்களும் தாக்கம் செலுத்துவதனையும் காணலாம். இவ்வகையில் பௌத்த – முஸ்லிம் உறவுகள் ஆரோக்கியமானதாகவும் சில சந்தர்ப்பங்களில் ஆரோக்கியமற்றதாகவும் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

மு.அப்துல் கரீம் (1996) என்பவரால் எழுதப்பட்ட இஸ்லாமும் சமய நல்லிணக்கமும் எனும் நூலில் இஸ்லாம் முன்வைக்கும் மனித குல ஒருமைப்பாடு மற்றும் சமய நல்லிணக்கம போன்ற அம்சங்கள் ஆராயப்பட்டுள்ளன. இதனால் சமூக நல்லிணக்கம் சம்பந்தப்பட்ட விடயங்களை அறிந்து கொள்வதற்குத் துணை புரிவதனூடாக இலங்கை பௌத்த – முஸ்லிம் உறவு நிலைகளைப் பேணுவதற்கும் ஊக்கமளிப்பதாய் அமைந்துள்ளது. எஸ். எச். ஆதம்;பாவா (2003) என்பவரால் மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமும் – சமாதானமும் மனித நேயமும் எனும் ஆய்வில் இஸ்லாத்தில் நிற, மொழி பேதங்களுக்கு இடமில்லை, மனித நேயம், நடுநிலை சமுதாயம் மற்றும் பிற சமயத்தவர்களுடன் எவ்வாறு இணக்கமாக நடந்து கொள்வது போன்ற விடயங்கள் விளக்கப்பட்;டுள்ளன.

இவ்வாறு நல்லிணக்கம், புரிந்துணர்வு, சகவாழ்வு போன்றவற்றை சமயங்கள் கூறுகின்ற வழித் தடயங்கள் ஊடாக எமக்கிடையே காணப்படுகின்ற முரண்பாடுகளை களையெடுத்து ஒருநாடு, ஒரே மக்கள் என்கிற வகையில் அவரவர் சமய சாஷ்டானங்களுடன் உண்மையான நம்பிக்கைதரும் வகையிலான ஐக்கியத்துடன் வாழ்வோமானால் உலகின் தலைசிறந்த ஒற்றுமைமிக்க நாடுகளில் நாம் முன்னிலையில் காணப்படுவோம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

(எஸ்.எல். மன்சூர்)

Related Articles

Leave a Reply

Back to top button