இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் பரிதாப மரணம்

நாட்டில் 5 இடங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.

கட்டுகஸ்தோட்டை, அம்பலங்கொட, ஹலாவத்த, மொனராகலை மற்றும் கந்தளாய் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் குறித்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கமைவாக கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – குருநாகல் வீதி, செனரத்கம பிரதேசத்தில் ஓட்டோ ஒன்று பாதசாரி பெண் ஒருவர் மீது மோதி வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பாதசாரி பெண் மரணமடைந்துள்ளதுடன் ஓட்டோவின் சாரதியும் ஓட்டோவில் பயணித்த பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் பேராதனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வெருல்லகம பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயது பெண்ணே மரணமடைந்துள்ளார்.

இதேவேளை, காலி, அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – காலி வீதியில் டிப்பர் ரக வாகனம் ஒன்று கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காரின் சாரதி உட்பட காரில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது காரின் சாரதியும் மற்றுமொருவரும் மரணமடைந்துள்ளனர்.

பரகஹதொட்ட, வடுமுல்ல பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே மரணமடைந்துள்ளனர். டிப்பர் ரக வாகனத்தின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநாகல் – சிலாபம் வீதி, முன்னேஸ்வரம் பிரதேசத்தில் லொறி ஒன்று எதிரே வந்த ஓட்டோ ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த ஓட்டோவின் சாரதி மற்றும் ஓட்டோவில் பயணித்த பெண் ஆகியோர் சிலாபம் வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது ஓட்டோவின் சாரதி மரணமடைந்துள்ளார்.

முஹூனுவட்டவன, சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயது நபரே மரணமடைந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஹெரகல வீதி, போப்பிட்டிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதசாரி பெண் ஒருவர் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பாதசாரி பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் மொனராகலை வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது பெண் மரணமடைந்துள்ளார்.

மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயது பெண்ணே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவு, 91ஆம் மைல்கல் பிரதேசத்தில், மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சாரத் தூண் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கந்தளாய் வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது மரணமடைந்துள்ளார்.

இந்த விபத்தில் கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயது நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button