செய்தியாளர் கிஷோரன்
வவுனியா பொது வைத்தியசாலையில் நோயாளர் நலன்பேண் செயற்திட்டங்கள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் பிரகாரம் நோயாளர்களை பார்வையிட வருபவர்கள் வீதியோரங்களில் தங்கியிருந்து பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம்கொடுப்பதையும் வீதிக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கோடும் அண்மையில் நோயார்களை பார்வையிட வருபவர்கள் தங்கியிருப்பதற்கு தொலைக்காட்சி வசதிகளுடன் கூடிய இடம் அமைக்கப்பட்டது.
இந் நிலையில் வைத்தியசாலை நுழைவாயிலில் இருந்து வெளிநோயாளர் பிரிவு வரை நடைபாதை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதுடன் விடுதிகளின் மலசலகூடங்கள் புனரமைக்கப்பட்டு நோயாளர்களின் வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை வவுனியா பொது வைத்தியசாலையின் அனைத்து விடுதிகளுக்கும் நோயாளர் படுக்கைகள் நவீன தொழில்நுட்பத்துடன் கூடியதாக மாற்றப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நீண்டகாலமாக பல்வேறு உட்கட்டுமான மற்றும் தளபாட வசதிகள் போதாத நிலையில் காணப்பட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் புதிய பரிமாணம் பெற்றுள்ளதாக நோயாளர்கள் தெரிவித்தனர்.