பெருகும் ராஜபக்ச க்கள் மீதான மக்களின் கோபாவேசம்!!
(நமது விசேட செய்தியாளர்)
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ராஜபக்சக்களின் நிர்வாகம் மீது பெருஞ்சீற்றத்தில் இருக்கும் தென்னிலங்கை மக்கள், நேற்றுப் பகல் கொழும்பு – காலிமுகத்திடலில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தை அடுத்து, வெறிகொண்டவர்கள் போல் ராஜபக்சக்களினது, அவர்களின் பிரதான சகாக்களினதும் வீடுகளைத் தேடித் தேடி தாக்குதல் நடத்தும் நடவடிக்கைகளை மிக மோசமாக மேற்கொண்டனர்.
‘மொட்டு’க் கட்சியினருக்கு எதிரான தாக்குதல் செய்திகள் நேற்று மாலை தொடக்கம் நள்ளிரவு வரை வந்த வண்ணம் இருந்தன.
ராஜபக்சக்களும், அவர்களுக்கு ஆதரவான முக்கியஸ்தர்களும் பெரும்பாலும் மக்கள் கண்ணில் படாமல் தலைமறைவாகிவிட்டனர். எனினும், அவர்களின் வீடுகளையும், அவர்களுக்குச் சொந்தமான ஹோட்டல்ளையும் மக்கள் விட்டுவைக்கவில்லை.
நள்ளிரவிலும், ஊரடங்குக்கு மத்தியிலும், மக்கள் கூட்டம் கூட்டமாக ராஜபக்சக்களினதும் அவர்களின் சகாக்களினதும் வீடுகளைச் சுற்றிவளைத்தனர்.
அதற்கமைய ஆளுங்கட்சியின் 25 இற்கும் மேற்பட்ட அரசியல் பிரமுகர்களின் வீடுகள் மக்களால் நேற்றிரவு அடித்து நொறுக்கப்பட்டு எரியூட்டப்பட்டன.
கொழும்பில் ‘மைனா கோ கம’, ‘கோட்டா கோ கம’ அறவழிப் போராட்டக்காரர்கள் மீதும், அவர்கள் அமைத்திருந்த கூடாரங்கள் மீதும் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்கள் நேற்றுப் பகல் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் மக்களின் போராட்டங்கள் வெடித்தன.
மக்களின் கோபாவேசத்தின் வெளிப்பாடாக வீரகெட்டிய – மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக இல்லமும் கொளுத்தப்பட்டது. அத்துடன் ராஜபக்சக்களின் பெற்றோரின் கல்லறையும் அடித்து நொறுக்கப்பட்டது.
ஜோன்சன் பெர்னாண்டோ, பந்துல குணவர்தன, கெஹலிய ரம்புக்வெல, சனத் நிஷாந்த, திஸ்ஸ குட்டியாராச்சி, விமல் வீரவன்ச, பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரண, சாந்த பண்டார, அருந்திக்க பெர்னாண்டோ, கனக ஹேரத், மஹிபால ஹேரத், காமினி லொக்குகே, நிமல் லான்சா, பிரசன்ன ரணவீர, ரோஹித அபேகுணவர்தன, எஸ்.எம். சந்திரசேன, துமிந்த திஸாநாயக்க, சன்ன ஜயசுமன உட்பட 25 இற்கும் மேற்பட்ட ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர்களின் வீடுகள் சேதமாக்கப்பட்டு எரியூட்டப்பட்டன. அவர்களுக்குச் சொந்தமான சில ஹோட்டல்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
இவை தவிர குருநாகல் மேயர், மொரட்டுவ மேயர் உட்பட ஆளுங்கட்சியின் கீழுள்ள உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் பலரின் வீடுகளும் எரிக்கப்பட்டன.
இந்தச் சம்பவங்கள் நடக்கும்போது பாதுகாப்புக்காக இருந்த பொலிஸார் தப்பியோடினர். பல இடங்களில் தற்பாதுகாப்புக்காகப் பொலிஸார் மக்களுடன் முரண்படவில்லை..
இதேவேளை, கொழும்பு – காலிமுகத்திடலுக்கு அரச வன்முறையாளர்களை அழைத்து வந்த பஸ்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், பொலிஸார் ஆகியோரின் வாகனங்களும் மக்களால் சேதமாக்கப்பட்டு எரியூட்டப்பட்டன.
அநுராதபுரத்தில் உள்ள ராஜபக்சக்களின் நம்பிக்கைமிகு மந்திரவாதியான ‘ஞான அக்கா’ என்றழைக்கப்படும் ஞானவதியின் வீடும், அவருக்குச் சொந்தமான ஹோட்டலும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
……….