“நிலைபேறான அபிவிருத்திக்கு பால்நிலை சமத்துவம் பேணுவோம்” என்னும் தொனிப் பொருளில் வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெண் முயற்சியாளர்களின் கௌரவிப்புடன் பிரதேச செயலக மகளிர் தினம் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வு வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் (25) பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்பட்ட, மூன்று பெண் முயற்சிகளுக்கு விருதுகளும் கௌரவிப்பும் வழங்கப்பட்டதுடன் விளையாட்டு நிகழ்வுகளில் சாதனை படைத்த பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட வீராங்கனைகளுக்கான கௌரவிப்பும் வழங்கப்பட்டது.
அபிவிருத்தியில் பெண்களின் பங்கு மற்றும் பெண்கள் உரிமைகள், பெண்களின் முன்னேற்றம் என்பவற்றை வெளிப்படுத்தி பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில், ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் ஐயம்பிள்ளை புவனநாயகி, வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் திருமதி பத்மாவதி ஜெயச்சந்திரன், ஓய்வு பெற்ற சிறைச்சாலை மேற்பார்வையாளர் சிறிசெயானந்தபவன் அகிலதிருநாயகி, உதவிப் பிரதேச செயலாளர் பிரியதர்சினி, பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.சுபாசினி மற்றும் பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மகளிர் சங்கங்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் – கிஷோரன்