கட்டுரை

மங்கையின் மலர்வுகள் – மகளிர்தின சிறப்புக் கட்டுரை!!

Women's Day

மங்கையின் மலர்வுகள் – மகளிர்தின சிறப்புக் கட்டுரை!

பெண் என்பவள் உணர்வுகளால் உருவாக்கப்பட்டவள். இனிமையான எண்ணங்களால் நிறைந்தவள். ஒவ்வொரு பெண்ணும் ஆழமான ஒரு தாங்கு துாண் போன்றவள். அவளது கனவுகள் , அவளது ஆசைகளுக்கு அப்பால் தான் நேசிப்பவா்களின் கனவுகளையும் எதிர்பார்ப்புகளை தனதாக எண்ணிச் சுமப்பவள். ஒரு பெண்தான் உலக இயக்கத்தின் சக்தியாக இருக்கிறாள். ஆண் பெண் ஈர்ப்பென்பது மிக வலியது. ஒரு பெண்ணின் புன்னகைக்கு ஆணின் பங்கு என்பது மிக இன்றியமையாதது. அதே போல ஒரு ஆணின் வெற்றிக்கும் பெண்ணின் துணை மிக அவசியம். இதில் வயதுவேறுபாடு கூட தோற்றுத்தான் போகிறது.

நீண்ட பிரயாணம் ஒன்றிற்காக புகைவண்டியில் பிரயாணம். யாருமற்றிருந்தது அந்த புகைவண்டிப்பகுதி. அது ஒரு அடர் மாலைப் பொழுது. இருள் கவிந்திருந்த அந்த வேளையில் தாலாட்டும் தனிமையோடு இரண்டறக் கலந்திருந்த நான் , அந்த மோன நிலையைக் கலைக்க நினைத்து எப்போதும் கைப்பையில் இருக்கும் புத்தகங்களில் ஒன்றை கையில் எடுத்தேன்.

தஸ்தா ஜெவ்ஸ்கியின் “வெண்ணிற இரவுகள்” கையில் வந்தது. பத்தாவது தடவையாக அந்தப் புத்தகத்தைப் படிக்கப்போகிறேன். அதன் வரிகளும்….நாயகி நாஸ்தன்காவும் எனக்குள்ளே ஆழ உறைந்துவிட்டவை.

அவ்வேளை ஒரு வயதான தம்பதிகள் உள்ளே வந்தனர். “மெல்ல….மெல்ல ஏறுங்கோ….” என்ற குரலில் புத்தகத்திலிருந்து பார்வையை நிமிர்த்தினேன். சுமார் அறுபத்தைந்து வயதைக் கடந்துவிட்டவர்கள். அந்தக் கணவரின் கைகளை இறுகப் பற்றியிருந்தார் மனைவி. அவரும் மனைவியை ஆதரவாக அணைத்தபடி உள்ளே வந்தார். “பெண்கள் எப்போதும் சார்ந்துவாழும் குணம் கொண்டவா்களே” எப்போதோ வாசித்த வரிகள் நினைவில் வந்து நின்றது.
வியப்போடு நிமிர்ந்து பார்த்தேன். பல இடங்களில் பல காட்சிகளைக் காண்கின்றபோதும் ஓரிரு காட்சிகள் மனதில் நின்று உள்ளத்தை நிறைத்துவிடுகிறது அல்லவா. அந்த மாதிரித்தான் இந்தக் காட்சியும்.

பற்றியிருந்த அந்த கரங்களில் தெரிந்த ஒற்றுமையும் நேசமும் எனக்கு பார்க்கத்தெவிட்டாத ஒன்றாக இருந்தது. அந்தப் பற்றுதலில் காதலும் நம்பிக்கையும் பற்றுக்கோடும் உரிமையும் என அத்தனை உணர்வுகளும் ஒட்டியிருப்பதாக உணர்ந்தேன்.
இருவரும் உள்ளே வந்து, தங்களுக்கான இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர். இருப்பதற்கு முன்னர் மனைவிக்கான இருக்கையை தனது கைத்துண்டினால் துடைத்துவிட்டு பின்னரே தனது இருக்கையை துடைத்தார் அந்த முதியவர். துடைத்து முடித்ததும் தனது கையிலிருந்த பையை மேலே வைத்துவிட்டு மனைவியை ஆதரவாகப் பற்றி அமரவைத்த அந்த அழகை பார்க்க கண்கோடி வேண்டும் எனத்தோன்றியது எனக்கு.

அந்தநாள் பிரயாணம் மிக இனிமையானதாக அமையும் என்ற நம்பிக்கையுடன் அவர்களைப் பார்க்கத் தொடங்கினேன். தனது மனைவிக்காக அவா் பார்த்துப் பார்த்துச் செய்த ஒவ்வொரு விடயங்களும் எனக்கு புதுமையானதாக இருந்தது.

பிரயாண அலுப்பில் சாய்ந்திருந்த மனைவியின் தலையைத் தடவி ஆசுவாசப்படுத்திய வேளையாகட்டும்….கணவனின் ஒற்றை இருமல் சத்தத்தில் விழித்த மனைவி அவசரமாய் தண்ணீர் போத்தலை எடுத்து கரம் பற்றி கணவனிடம் பருக கொடுத்த வேளையாகட்டும்….கனிவு ததும்பிய அந்த நிமிடங்கள் ஒரு ஓவியமாய் என்னுள்ளே பதிந்து கொண்டது.

இல்லறம் என்பதன் புனிதமும் மகத்துவமும் அங்கே புரிந்தது. ஒரு மனைவியின் நம்பிக்கையும் பாதுகாப்பும் அவளது கணவனாகவே இருக்கின்றார். அந்த நம்பிக்கை உடையும் போது அவளது மனம் ஏன் சிதறுண்டுவிடுகிறது என்பது அவ்வேளைதான் தெரிந்தது. அதீத எதிர்பார்ப்பும்…அளவு கடந்த நம்பிக்கையும் உடையும் போது மனம் வெறுத்துவிடுவது. இயல்பாகிறது.

இல்லற பந்தத்தில் பெண்ணானவள், கணவனின் கரம் பற்றுவதோடு வாழ்வின் முழுமையும் அவன்தான் எனவும் ஆழமாக நம்பிக்கையை வளர்த்து விடுகின்றாள். ‘தன் சந்தோசங்களைக்கண்டு சந்தோசப்படவும் தன் துக்கங்களை பகிர்ந்துகொள்ளவும் மீண்டும் தன்னை மழலையாக்கவும் வந்திருக்கும் இறையியல் தான் கணவன் என எண்ணுகிறாள்.’ அந்த வெற்றிக்களிப்பில் அவளது மனம் நெகிழ்கிறது. அதன் விளைவாக கணவனைக் கொண்டாடுகிறாள். கணவனின் உலகத்தில் முழுவதும் தானே ஆகிறாள். கணவனுக்குத் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்துச் செய்கிறாள்.

கடைசி வரை பாதுகாப்பும் நம்பிக்கையும் என எண்ணும் கணவன், ஏதோ ஒரு இடத்தில் அவளது நியாயங்களிலிருந்து அந்நியப்பட்டுப் போகும் போது அவளது நம்பிக்கையும் அவளது எதிர்பார்ப்பும் பொய்த்துப் போகையில் அவள் உடைந்துவிடுகிறாள். அவளுக்குள் மொட்டுவிட்டு மலர்ந்து கிடக்கும் அந்த நேசமலா் வாடிவிடுகின்றது. அதன் பின்னான வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறட்டும் என எண்ணுகிறாள். பல துன்பங்களுக்கு முகம் கொடுக்கிறாள். வாழ்க்கை கடைசி வரை தன் எண்ணம் போல் அமையும் என்றெண்ணி அவள் எழுப்பிய இனிமையான சுவரில் வெடிப்பு உண்டாகி அதுவே அந்த கட்டடம் சிதைந்து சின்னாபின்னமாக காரணமாகிவிடுகிறது.

கடைசி வரை மனைவியின் மனதில் உதித்த மெல்லிய கனவுகளை கலைக்காமல் வாழும் ஆண்களின் பின்னால் அவா்களின் மனைவிமாரும் இப்படித்தான் பற்றிப்பிடித்திருப்பார்கள் எனத்தோன்றியது. அந்த முதியவரின் பற்றும் நேசமும் என்னை வியக்கவைத்தது. அவா்களைப் பார்த்தபோது அன்றில் பறவைகளாகவே எனக்குத் தோன்றியது.

அந்தப் பிரயாணத்தின் இறுதிவரை அவா்கள் இருவரும் ஒருவருக்கு மற்றவர் செய்த பணிவிடைகளும் ஒருவரை மற்றவர் கவனித்துக்கொண்ட விதமும் இளமையைவிடவும் முதுமையில் தான் துணை என்பது மிக அவசியமாகிறது என்ற உண்மையை எனக்கு உணர்த்தியது. அந்த இனிய காட்சியை மனதில் நிறைத்துக்கொண்டு புகைவண்டியைவிட்டு இறங்கினேன்.

பெண்மைபோற்றுவது என்பது அவளைப் புரிந்து கொள்வது தான்….அவளது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது தான்…காலம் கடந்தாலும் காயாது கிடக்கும் நேசங்கள் பெண்மையின் உன்னதம் புரிந்தவை.

என் வரிகள் பொதுவானவை..இது ஆண்களுக்கும் பொருந்தும்….விதி விலக்குகள் எல்லாவற்றிலும் உண்டு…

கோபிகை!!

Related Articles

Leave a Reply

Back to top button