கடந்த 26ஆம் திகதி தென்னாப்பிரிக்காவில் முதலாவதாக ஒமிக்ரொன் வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டது. வீரியமிக்க ஒமிக்ரொன் கொரோனா வைரஸ் திரிபு சர்வதேச ரீதியாக ஆபத்தான வைரஸ் திரிபாகக் காணப்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
இதுவரையில் சுமார் 40 நாடுகளில் இந்தத் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஒமிக்ரொன் வைரஸ் திரிபு தொடர்பில் பதற்றமடையாமல் அதற்கு முகங்கொடுப்பதற்கு தயாராக வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் அதற்காக புதிய தடுப்பூசி தேவைப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த இரண்டு வாரங்களில் நாட்டுக்குள் பிரவேசித்த 94 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களிடம் பெறப்பட்ட மாதிரிகள் மரபணு சோதனைக்காக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் அவர்களில் 93 பேருக்கு டெல்டா வைரஸ் திரிபு தொற்றுறுதியாகியுள்ளதாகவும் ஒருவருக்கு மாத்திரமே ஒமிக்ரொன் திரிபு தொற்றுறுதியாகியுள்ளதாகவும் அந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர, தெரிவித்தார்.
எவ்வாறாயினும் அவர்களில் வீரியமிக்க ஏ.வை 28 மற்றும் ஏ.ஐ. 104 ஆகிய உப திரிபுகள் தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு, கம்பஹா, நுவரெலியா, வவுனியா மற்றும் வெலிகம உள்ளிட்ட பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர, தெரிவித்தார்.